வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுள்ள டோனல்ட் டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்துள்ளார்.
குறிப்பாக, அரசாங்க வேலைக்கான ஆள் நியமன முடக்கத்தை அறிவித்துள்ள அவர், அரசாங்க ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்கான விதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
பதவி ஏற்றதும் திரு டிரம்ப் கையெழுத்திட்ட முதல் உத்தரவுகளில் இவையும் அடங்கும்.
வாஷிங்டன் நாடாளுமன்றக் கட்டடத்தில் பதவி ஏற்ற பின்னர், பழைய நிர்வாகத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவர், அழிவுக்கு இட்டுச் செல்லும் கிட்டத்தட்ட 80 நிர்வாக நடவடிக்கைகளை ரத்து செய்யப்போவதாகக் கூறினார்.
பைடனின் நிர்வாகத்தைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், “அமெரிக்க வரலாற்றிலேயே ஆக மோசமான நிர்வாகம் அது,” என்றார்.
வேலை நியமன முடக்கம் உள்ளிட்ட ஊழியரணி நிர்வாக உத்தரவுகள் மத்திய அரசாங்கத்தின் ஊழியர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி என்று கருதப்படுகிறது.
“உள்நாட்டு வருவாய்ச் சேவைத் துறையில் புதிய முகவர் நியமனங்களைத் தற்காலிகமாக நிறுத்துவோம். மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வரவேண்டும்,” என்று திரு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க மத்திய அரசாங்க முழுநேர ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டில் இருந்து வேலை செய்வதாக 2024ஆம் ஆண்டின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோனி எர்ன்ஸ்ட் கூறி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
ஆனால், அந்த எண்ணிக்கை தவறானது என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் தெரிவித்து உள்ளன.
உடற்குறை உள்ளோர், உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் மனைவி போன்றோர் உள்ளிட்ட ஏறக்குறைய 10 விழுக்காட்டினர் வீட்டில் இருந்து வேலை செய்வதாக மேலாண்மை மற்றும் வரவுசெலவு அலுவலகத்தின் தரவு குறிப்பிடுகிறது.