வாஷிங்டன்: ஈரான் முதலில் தாக்கக்கூடும் என்று கருதியதாலேயே அதற்கு எதிரான இஸ்ரேலிய நடவடிக்கைகளில் சேர்ந்துகொள்ள அமெரிக்கப் படையினருக்கு உத்தரவிட்டதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
புதன்கிழமை (மார்ச் 4) அவர் கூறிய கருத்து, அதற்கு முதல்நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோ முன்வைத்த காரணத்திற்கு முரணாக உள்ளது.
டெஹ்ரானுக்கு எதிரான இஸ்ரேலின் உத்தேச நடவடிக்கைக்கு ஈரான் பதிலடி கொடுக்கக்கூடும் என்று நினைத்ததாலேயே அமெரிக்கா போர் தொடுத்ததாகத் திரு ரூபியோ தெரிவித்திருந்தார்.
“இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியும். அது அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலாக உருவெடுக்கக்கூடும் என்பதும் எங்களுக்குத் தெரியும். அவர்கள் தாக்குவதற்கு முன்பு நாங்கள் முன்னெச்சரிக்கையாகத் தாக்கவில்லை என்றால் எங்கள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம்,” என்று திரு ரூபியோ கூறினார்.
போருக்குள் அமெரிக்காவை இழுத்துவிட்டது இஸ்ரேல்தான் என்ற கருத்துகளையும் அமெரிக்க அதிபர் நிராகரித்தார். மாறாகத் தாமே அவர்களைக் கட்டாயப்படுத்தியிருக்கக்கூடும் என்றார் திரு டிரம்ப்.
ஆனால், எந்தத் தூண்டுதலும் இல்லாமல் அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததாக ஈரான் கூறுகிறது.

