தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிக்டாக் மீதான உத்தேசத் தடை: 90 நாள் அவகாசம் வழங்கப்படலாம் என்றார் டிரம்ப்

2 mins read
3d38850e-bdd0-4885-8aa2-e1bc42fc8306
டிக்டாக் சேவை தற்போது கிடைக்கப் பெறாததாகக் குறிப்பிடும் செய்தி ஐஃபோனில் காட்டப்படுகிறது. - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், திங்கட்கிழமை (ஜனவரி 20) தாம் பதவியேற்ற பிறகு டிக்டாக் மீதான உத்தேசத் தடையை அநேகமாக 90 நாள்களுக்கு நிறுத்திவைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

என்பிசி செய்தி நிறுவனத்திற்கு சனிக்கிழமை (ஜனவரி 18) அவர் அளித்த பேட்டியில், “90 நாள் அவகாசம் என்பது அநேகமாக வழங்கப்படும், ஏனெனில் அது பொருத்தமானதே,” என்றார்.

“அவ்வாறு செய்ய நான் முடிவெடுத்தால், அநேகமாக திங்கட்கிழமை அதை அறிவிப்பேன்,” என்று டிரம்ப் கூறினார்.

சனிக்கிழமை இரவு டிக்டாக்கை பயன்படுத்திய பயனர்களுக்கு, “சட்டம் எங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க எங்களைக் கட்டாயப்படுத்தும். அமெரிக்காவில் எங்கள் சேவையை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் முனைப்புடன் செயல்படுகிறோம்,” என்ற செய்தி இடம்பெற்றது.

சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக்டாக், அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் உத்தரவாதம் வழங்கினால் ஒழிய, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) அமெரிக்காவில் தன் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக வெள்ளிக்கிழமை கூறியது.

ஆனால், டிக்டாக்கின் இந்தக் கருத்தை “கவனத்தை ஈர்க்கும் செயல்” என நிராகரித்த வெள்ளை மாளிகை, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க எதிர்வரும் டிரம்ப் நிர்வாகத்தின் கையில் இருப்பதாகச் சொன்னது.

வெள்ளை மாளிகையின் இந்த அறிக்கைக்கு டிக்டாக் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்கா நியாயமற்ற அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி டிக்டாக்கை ஒடுக்குவதாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியது.

டிக்டாக்கின் எதிர்காலம் குறித்த நிச்சயற்றத்தன்மையால் அதன் பயனர்களில் பலர் மாற்று செயலிகளை நாடியுள்ளனர். டிக்டான மீதான உத்தேசத் தடையை முன்னிட்டு, போட்டி நிறுவனங்களான மெட்டா, ஸ்னேப் இவ்விரண்டின் பங்கு விலைகள் ஜனவரியில் உயர்ந்தன.

குறிப்புச் சொற்கள்