பாம் பீச்: ரஷ்ய அதிபர் புட்டினுக்கு எதிராக தான் வெறுப்படைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) தெரிவித்தார்.
இதன் தொடர்பில், ரஷ்ய அதிபர் புட்டின், உக்ரேனிய போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தடையாக இருக்கிறார் என்று தெரிந்தால் அந்நாட்டின் எண்ணெய் விற்பனைக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார். அதில் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் நாடுகளுக்கு எதிராக 25 முதல் 50 விழுக்காடு வரிச்சுமையை விதிக்கப்போவதாக திரு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் என்பிசி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் ரஷ்ய அதிபர் புட்டின் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியின் தலைமைத்துவத்தின் மீது கேள்விக்குறி எழுப்பியது குறித்து தான் மிகுந்த கோபமடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து, உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, ரஷ்யாவுடனான உறவில் நட்புசார்ந்த போக்கைக் கடைப்பிடித்து வருவது அமெரிக்க நட்பு நாடுகளை எரிச்சலடைய வைத்துள்ளது.
அவரது தற்போதைய கோபம் உக்ரேனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையினால் உருவானதாக கூறப்படுகிறது.
“உக்ரேனில் ஏற்படும் மனித உயிரிழப்பை ரஷ்யாவுடன் சேர்ந்து முடிவுக்குக் கொண்டு வர முடியாவிட்டால், அதற்குக் காரணம் ரஷ்யா என நான் நினைத்தால், ரஷ்ய எண்ணெய்க்கு எதிராக நான் வரி விதிப்பேன். அது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் அனைத்து நாடுகள் மீதும் வரி விதிப்பதாகும்.
“ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியாது. அதற்கு எதிராக அனைத்து எண்ணெய் விற்பனைக்கும் 25 முதல் 50 விழுக்காடு வரை வரி விதிக்கப்படும்,” என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன், மேலும் வர்த்தக நடவடிக்கைகளும் ஒரு மாதத்துக்குள் எடுக்கப்படும் என்று அவர் விளக்கினார்.