ஃபுளோரிடா: ஈரான் போர் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஆயினும், மத்திய கிழக்கை உலுக்கிவரும் தாக்குதல்கள் எப்போது நிறுத்தப்படும் என்று உறுதியாக அவர் எதனையும் தெரிவிக்கவில்லை.
மத்திய கிழக்கு நிலவரத்தால் உலகப் பொருளியல் ஆட்டங்கண்டுள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல் முழுமையடைந்துவிட்டதாக சிபிஎஸ் செய்தி ஊடகத்திடம் திரு டிரம்ப் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் முன்னேற்றம் தென்பட்டது.
“விரைவில், வெகுவிரைவில் என்று நினைக்கிறேன். அவர்களிடம் இருந்த அனைத்தும் போய்விட்டன, அவர்களின் தலைமைத்துவம் உட்பட,” என்றார் திரு டிரம்ப்.
ஃபுளோரிடா மாநிலத்தின் மயாமி நகருக்கு அருகே உள்ள டோரல் தேசிய கோல்ஃப் சங்கத்தில் செய்தியாளர்களிடம் அதிபர் டிரம்ப் அவ்வாறு கூறினார். போர் இன்னும் சில நாள்களில் அல்லது வாரங்களில் முடிவுக்கு வந்துவிடுமா என்று அவர்கள் கேட்டனர். அதற்குத் திரு டிரம்ப் பதில் தந்தார்.
தேவைப்பட்டால் பின்னர் தாக்குவதற்காக மின்சாரக் கட்டமைப்பு உள்ளிட்ட மிக முக்கிய இலக்குகள் சிலவற்றை விட்டுவைத்திருப்பதாக அவர் சொன்னார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக மேற்கொள்ளப்படும் எண்ணெய் விநியோகத்தை டெஹ்ரான் தடுத்தால் எண்ண முடியாத அளவுக்குப் பெரிய அளவில் தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் மிரட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
“அவர்கள் அவ்வாறு ஏதாவது செய்தால், அவர்களோ அவர்களுக்கு உதவுவோரோ இனிமேல் மீளமுடியாத அளவுக்கு அந்தப் பகுதியை நாங்கள் கடுமையாகத் தாக்குவோம்,” என்றார் அவர்.
ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா காமெனி குறிவைக்கப்படுவாரா என்பதுபற்றிக் கருத்துக்கூற திரு டிரம்ப் மறுத்துவிட்டார். ஆனால் அவர் நியமிக்கப்பட்டது சரியான முடிவன்று என்று அவர் குறிப்பிட்டார்.
வெனிசுவேலாவைப் போன்றே ஈரானின் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதில் தாம் பங்குபெறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

