வாஷிங்டன்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் டிக்டாக்கை வாங்கப் பேச்சு நடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஜனவரி 27ஆம் தேதி, செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைக்ரோசாஃப்ட், டிக்டாக் இரண்டுமே உடனடியாகக் கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. வழக்கமான பணி நேரத்துக்கு அப்பால் கருத்துரைக்கும்படி அணுகியதாகவும் அது குறிப்பிட்டது.
முன்னதாக, டிக்டாக்கை வாங்குவதன் தொடர்பில் சில தரப்புகளுடன் பேச்சு நடத்திவருவதாகத் திரு டிரம்ப் கூறினார். அடுத்த 30 நாள்களுக்குள் முடிவு தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் 170 மில்லியன் பயனாளர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
டிக்டாக் செயலியின் உரிமையாளரான ‘பைட் டான்ஸ்’ நிறுவனம், அமெரிக்கர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடிய அபாயம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
எனவே, தேசியப் பாதுகாப்பை முன்னிட்டு ‘பைட் டான்ஸ்’ நிறுவனம் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் அல்லது தடையை எதிர்கொள்ள வேண்டும் என்ற சட்டம், ஜனவரி 19ஆம் தேதி நடப்புக்கு வந்தது. அதற்குச் சற்றுமுன், அமெரிக்காவில் டிக்டாக் இணையத்திலிருந்து அகற்றப்பட்டது.
திரு டிரம்ப், ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அந்தச் சட்டத்தின் அமலாக்கத்தை 75 நாள்கள் தள்ளிவைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

