வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த உறுதிகூறியிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அடுத்து, சீனாவையும் அவ்வாறு செய்ய வைப்பதற்கு முயலப்போவதாக அவர் புதன்கிழமை (அக்டோபர் 15) சொன்னார். மாஸ்கோவுக்கு எரிசக்தி மூலம் கிடைக்கும் வருவாயைக் குறைக்கும் முயற்சிகளை வாஷிங்டன் முடுக்கிவிட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து கப்பல்களின் மூலம் அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு நிலைகளில் உள்ளன. 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது. அதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மாஸ்கோவுக்கு எதிராகத் தடைகளை விதித்தன. அதன் பின்னர், ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தின. அதனால் எண்ணெய் விலையைக் குறைக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டது ரஷ்யா. அதனை இந்தியாவும் சீனாவும் அவற்றுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டன.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவை அண்மையில் குறிவைத்தார் அமெரிக்க அதிபர். அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் இந்திய ஏற்றுமதிகளுக்குக் கூடுதல் தீர்வைகளை அவர் விதித்தார். மாஸ்கோவிடமிருந்து புதுடெல்லி எண்ணெய் வாங்குவதைத் திரு டிரம்ப் விரும்பவில்லை. உக்ரேனுடன் அமைதி உடன்பாட்டை எட்ட ரஷ்யாவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு அதற்கு நெருக்கடி கொடுக்க அவர் முயல்கிறார்.
“இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. ரஷ்யாவிடமிருந்து இனிமேல் எண்ணெய் வாங்கப்போவதில்லை என்று திரு மோடி என்னிடம் உறுதிகூறியுள்ளார்,” எனத் திரு டிரம்ப் வெள்ளை மாளிகை நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.
வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அதுபற்றி உடனடியாகக் கருத்து எதனையும் கூறவில்லை.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட், ஜப்பானிடமும் அத்தகைய வேண்டுகோளை வைத்திருப்பதாகச் சொன்னார். ரஷ்யாவிடமிருந்து எரிசக்தி வாங்குவதை நிறுத்துமாறு ஜப்பானிய நிதி அமைச்சர் கத்சுனோபு கத்தோவிடம் கோரியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஜப்பானிய அரசாங்கம் அதுபற்றி உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, இந்தியாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சில, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக்கொள்ள ஆயத்தமாகிவருவதாகக் கூறியிருக்கின்றன. அத்தகைய மூன்று நிறுவனங்கள் ராய்ட்டர்ஸ் ஊடகத்திடம் அதனைப் பகிர்ந்துகொண்டன.
இந்நிலையில், எரிசக்திக் கட்டணங்கள் நிலையாக இருப்பதையும் எண்ணெயைப் பெறுவதையும் உறுதிசெய்வதே முக்கியமான இரண்டு இலக்குகள் என்று இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்தியப் பயனீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
அண்மையில் அமெரிக்கா இந்தியப் பொருள்களுக்கான வரியை இரட்டிப்பாக்கியது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய அதிகாரிகள் வாஷிங்டன் சென்றுள்ளனர்.