உச்ச நீதிமன்றமும் கைவிட்டால் அமெரிக்காவுக்குப் பேரிழப்பு: டிரம்ப்

உச்ச நீதிமன்றமும் கைவிட்டால் அமெரிக்காவுக்குப் பேரிழப்பு: டிரம்ப்

2 mins read
0faadfc7-e337-491d-9c0f-7ea99c24dcf6
அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) தனது தீர்ப்பை வழங்க உள்ளது. - படம்: ஊடகம்

வாஷிங்டன்: தாம் விதித்த வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றமும் அறிவித்தால் டிரில்லியன் டாலர்களைக் குவித்துவரும் புதிய வரிகளைத் தளர்த்த வேண்டி வரும் என்றும் அதன்மூலம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்றும் அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் வரி தொடர்பான உடன்பாடுகள் எட்டப்பட்டுவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவுக்கு வெற்றி கிட்டாவிடில் எல்லாவற்றையும் தளர்த்த வேண்டி வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக நாடுகளுக்கு தாம் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்று கீழ் நீதிமன்றம் கடந்த வாரம் வெளியிட்ட தீர்ப்பை மாற்றுமாறு திரு டிரம்ப் உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிடுமாறு புதன்கிழமை (செப்டம்பர் 3) டிரம்ப் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளுக்கு இறக்குமதி வரி விதிக்கும் உரிமை அதிபருக்கு உண்டு என்பதன் அடிப்படையில், வரிகளின் சட்டபூர்வ தன்மையை ஆராய்ந்து தீர்ப்பளிக்குமாறு அந்த மனு மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கீழ் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு, திரு டிரம்ப்பின் பொருளியல் மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை தலைகீழாக மாற்றக்கூடியதாகவும் பில்லியன் டாலர் மதிப்பிலான வரிகளைத் திருப்பித் தர அமெரிக்காவை கட்டாயப்படுத்தக்கூடியதாகவும் உள்ளதென கருதப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை (செப்டம்பர் 3) வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், மேல்முறையீட்டு வழக்கில் தமது நிர்வாகம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஓர் உடன்பாடு செய்துகொண்டோம். அதன் மூலம் ஏறக்குறைய டிரில்லியன் டாலர் பணத்தை அவர்கள் வரியாகச் செலுத்தி வருகிறார்கள். 

“அதற்காக அவர்கள் வருத்தப்படவில்லை, மாறாக மகிழ்ச்சியாக உள்ளனர். எல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. உடன்பாடுகளும் கைகூடிவிட்டன,” என்றார்.

“இப்படிப்பட்ட நேரத்தில் வரிகள் செல்லாது என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டால், நாம் வரிக்கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டி வரும் என்று கருதுகிறேன்.

“வரிகளை ரத்து செய்ய நாம் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்,” என்று தெரிவித்தார்.

மேல்முறையீட்டு மனு மீது அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) தீர்ப்பு வழங்க உள்ளது.

இதற்கிடையே, அதிபர் டிரம்ப்பின் கருத்துக்கு மாற்றாக வர்த்தக நிபுணர்களின் கூற்று உள்ளது.

அமெரிக்காவுக்குள் வரும் பொருள்களுக்கான வரிகளை அமெரிக்காவில் உள்ள இறக்குமதியாளர்கள்தான் செலுத்துகிறார்களே தவிர, வெளிநாட்டு நிறுவனங்கள் அல்ல என்கின்றனர் நிபுணர்கள்.

குறிப்புச் சொற்கள்