அலஸ்கா: அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே அந்நாட்டு அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் அலஸ்கா நேரப்படி வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) முற்பகல் 11 மணிக்கு (சிங்கப்பூர் நேரம்: ஆகஸ்ட் 16 அதிகாலை 3 மணி) சந்திக்கவிருக்கின்றனர்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்திக்கவிருப்பது இது முதன்முறை. ஏங்கரேஜ் நகரில் உள்ள ராணுவத் தளமொன்றில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது திரு டிரம்ப் உக்ரேனில் ரஷ்யா தொடுத்துள்ள போர் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று உறுதி கூறியிருந்தார்.
உலக அமைதிக்காகப் பாடுபடுபவர் எனும் தோற்றத்தைத் தர முற்படுகிறார் அமெரிக்க அதிபர். திரு புட்டினுடன் தமக்குள்ள தனிப்பட்ட நட்புறவைப் பயன்படுத்தி உக்ரேனில் சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்குத் திரு டிரம்ப் முயல்வார் என்று நம்பப்படுகிறது.
உக்ரேன் விவகாரத்தில் மாஸ்கோ சமரசம் செய்யத் தயாராக இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக கிரம்ளினுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மாஸ்கோ தனது திட்டத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தும் வழக்கமில்லை என்றார்.
சந்திப்பு தோல்வியடைவதற்கான சாத்தியம் ‘25 விழுக்காடு’ என்று வியாழக்கிழமை திரு டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
திரு புட்டின் முழுமையான போர் நிறுத்தத்திற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளார். ஆனால் வான்வழிப் போரில் கட்டங்கட்டமான போர் நிறுத்தம் என்பது ஒரு சமரசமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் மற்றொன்று முந்தைய ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டி வருகின்றன.
சந்திப்பில் உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. தாம் இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு தீர்மானமும் அர்த்தமற்றது என்று அவர் கூறிவருகிறார்.
ரஷ்யா சண்டை நிறுத்த உடன்பாட்டை எட்டவில்லை என்றால் அதன் மீது கடும் தடைகள் விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் ஒரு வாரத்திற்கு முன்பு மிரட்டியிருந்தார். இந்நிலையில் அவர் திரு புட்டினைச் சந்திக்கவிருக்கிறார்.