வாஷிங்டன்: முகத்தில் புன்முறுவல் இல்லை என்பதற்காக சிஎன்என் செய்தியாளரான கேய்ட்லன் கொலின்ஸ் என்பவரை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் திட்டினார்.
இந்தச் சம்பவம் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 3) நடைபெற்றது.
திருவாட்டி கொலின்சை ஆக மோசமான செய்தியாளர் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.
ஜெஃப்ரி எப்ஸ்டைன் தொடர்பான கோப்புகள் வெளியிடப்பட்டது தொடர்பாக திருவாட்டி கொலின்ஸ் கேள்வி எழுப்ப முயன்றபோது இது நடந்தது.
“நீங்கள் ஓர் இளம் பெண். நீங்கள் சிரித்து நான் பார்த்ததில்லை. உங்களை எனக்குப் பத்தாண்டுகளாகத் தெரியும். இதுவரை உங்கள் முகத்தில் புன்சிரிப்பை நான் பார்த்தில்லை என நினைக்கிறேன்,” என்று திருவாட்டி கொலின்சைப் பரிகாசம் செய்யும் வகையில் தெரிவித்தார் அதிபர் டிரம்ப்.
இப்ஸ்டைனின் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் பற்றி அதிபர் டிரம்ப்பிடம் திருவாட்டி கொலின்ஸ் கேள்வி கேட்டபோது அதிபர் டிரம்ப் குறுக்கிட்டார்.
“நீங்கள் ஏன் சிரிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உண்மை பேசாததே இதற்குக் காரணம்,” என்றார் அதிபர் டிரம்ப்.

