வாஷிங்டன்: மோசமடைந்துவரும் இபோலா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 1.4 பில்லியன் டாலருக்கும் (1.816 பில்லியன் வெள்ளி) மேலான நிதியுதவியை வெள்ளை மாளிகை நாடுகிறது.
நிதியுதவியைப் பெறுவதற்கு நாடாளுமன்றத்திடமிருந்து ஒப்புதல் பெறும் முயற்சியில் வெள்ளை மாளிகை ஈடுபட்டுள்ளது. மனிதாபிமான நெருக்கடிக்கு நடவடிக்கை எடுக்கத் தேவையான 800 மில்லியன் டாலரும் அத்தொகையில் அடங்கும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி தேவைப்படும் முயற்சிகள்
இபோலா கிருமியுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கக்கூடிய அமெரிக்கர்களைத் தனிமைப்படுத்த கென்யாவில் நிலையம் அமைப்பது, சிகிச்சை அளிப்பது, கிருமித்தொற்றுக்கு ஆளானோருடன் தொடர்புகொண்டவர்களை அடையாளம் காண்பது, கிருமித்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக அந்த 800 மில்லியன் டாலர் தொகையைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இபோலா கிருமித்தொற்று அமெரிக்காவிலும் பரவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர். அதற்காக 500 மில்லியன் டாலர் நிதியையும் அவர்கள் நாடுகின்றனர். நோய்க் கண்காணிப்பு, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு, பலதரப்பட்ட அமைப்புகள் மற்றும் தனியார் துறையுடனான பங்காளித்துவங்கள் உள்ளிட்டவற்றுக்காக அத்தொகையைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 90 மில்லியன் டாலர் தொகை அரசதந்திர முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்படும். கிருமித்தொற்றுக்கு ஆளான அமெரிக்கர்களை வெளியேற்றி அவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைப்பது போன்றவை அத்தகைய முயற்சிகளில் அடங்கும் என்று அமெரிக்க அதிகாரி விவரித்தார்.
சிக்கல்
இந்த கோரிக்கைகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று சம்பந்தப்பட்டவர்கள் சிலர் கூறுகின்றனர். ஆளும் குடியரசுக் கட்சியினர் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் திரு டிரம்ப்பின் ஆட்சியில் அதிருப்தி கொண்டுள்ளது அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மருத்துவப் பராமரிப்புச் சேவைகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கம் நிதியை திரு டிரம்ப்பின் அரசாங்கம் செலவு செய்ய மறுத்ததால் அதிருப்தி நிலவுகிறது.
தற்போதைய இபோலா கிருமிப் பரவல் தலைதூக்குவதற்கு முன்பு அனைத்துலக மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு, ஆப்பிரிக்கப் பொதுச் சுகாதார முயற்சிகள் ஆகியவற்றுக்கு நிதி அளிப்பதை வாஷிங்டன் நிறுத்திக்கொண்டது. அதனால் தற்போதைய இபோலா கிருமிப் பரவலைக் கையாள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

