நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் நேட்டோ கூட்டமைப்பு ஒத்துழைக்காததைக் கண்டித்துள்ளார். அமெரிக்காவுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை என்றும் அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) கூறினார்.
அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகத் தனது அனுமதி இல்லாமல் ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் என்று ஈரான் கடந்த வாரம் அறிவித்தது. இதனால் உலக எரிசக்திச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ள அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உதவி செய்யும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
ஆனால், அந்தத் திட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் நேட்டோ மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளைத் திரு டிரம்ப் சாடி வருகிறார்.
“நேட்டோ அமைப்பு முட்டாள் தனமான செயலைச் செய்துள்ளது,” என்று திரு டிரம்ப் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அப்போது அவருடன் அயர்லாந்துப் பிரதமர் மைக்கல் மார்ட்டினும் இருந்தார்.
“நேட்டோ அமெரிக்காவுக்குத் துணை நிற்குமா என்பதைப் பல நாள்களாக யோசித்துள்ளேன். இப்போது அதைச் சோதிக்க முடிகிறது,” என்றார் அதிபர் டிரம்ப்.
“ஈரானை எதிர்த்து அமெரிக்காவால் தனியாகப் போர் செய்ய முடியும். எங்களுக்கு அவ்வளவு பெரிய உதவி வேண்டியதில்லை, தேவையும் இல்லை,” என்றார் திரு டிரம்ப்.
செய்தியாளர் சந்திப்பில் நேட்டோவுடனான அமெரிக்காவின் நட்பு இனி எப்படி இருக்கும் என்று கேட்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதற்குப் பதிலளித்த திரு டிரம்ப், “நிச்சயமாக நேட்டோவுடனான உறவு குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு எந்த எண்ணமும் மனத்தில் இல்லை,” என்றார் அவர்.
இவ்வேளையில், நிலைமை சீராகும் வரை ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸ் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது என்று அந்நாட்டு அதிபர் இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

