வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) தாம் பேசவிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் திரு புட்டினுடன் பேசத் திட்டமிட்டுள்ளதாக திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
“அதிபர் புட்டினுடன் நான் செவ்வாய்க்கிழமை பேசவிருக்கிறேன். கடந்த வார இறுதியில் பல வேலைகளைச் செய்து முடித்தோம்,” என்று திரு டிரம்ப் அமெரிக்க ஆகாயப் படை விமானத்தில் பயணம் செய்தபோது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“போரை முடிவுக்குக் கொண்டுவர முடியுமா என்பதை ஆராயப்போகிறோம். முடியலாம், முடியாமலும் போகலாம். ஆனால், சாத்தியமாவதற்கு நல்ல வாய்ப்புள்ளது என நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.
போரை 30 நாள்களுக்கு நிறுத்துவதற்கான பரிந்துரையை உக்ரேன், சென்ற வாரம் ஏற்றுக்கொண்டது. திரு புட்டினையும் அதை ஏற்றுக்கொள்ள வைப்பது திரு டிரம்ப்பின் நோக்கமாகும்.
உக்ரேன், ரஷ்யா இரு தரப்புக்கும் இடையிலான ஆகாயப் படைத் தாக்குதல்கள் வார இறுதியில் தொடர்ந்தன.
“நிலத்தைப் பற்றிப் பேசுவோம். மின்சார ஆலைகளைப் பற்றிப் பேசுவோம்,” என்று போரில் இரு தரப்புகளும் விட்டுக்கொடுப்பது பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டதற்கு திரு டிரம்ப் பதிலளித்தார். “இதன் தொடர்பில் ஏற்கெனவே உக்ரேன், ரஷ்யா இரு தரப்பும் நன்கு ஆலோசித்துவிட்டன என்று நான் நினைக்கிறேன். சில இடங்களைப் பங்குபோடுவது குறித்து நாங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம்,” என்று திரு டிரம்ப் விளக்கினார்.
அமெரிக்கா வரைந்த 30 நாள் போர் நிறுத்தப் பரிந்துரையைத் தாம் பொதுவில் ஏற்றுக்கொள்வதாக திரு புட்டின் முன்னதாகக் கூறியிருந்தார். அதேவேளை, எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமும் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் வண்ணம் அமையவேண்டும் என்றும் போர் தொடங்கியதற்கான மூலக் காரணம் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
திரு புட்டினின் அக்கருத்து, ஒருவர் தானாக மனத்தை மாற்றிக்கொள்ளும் வண்ணம் ஜோடிக்கப்பட்டது என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்திருந்தார்.

