வாஷிங்டன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிர்காலத்தில் நிதி வழங்குவதை நிறுத்த இருப்பதாக ஞாயிற்றுக்கிழமையன்று (பிப்ரவரி 2) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவில் சில பிரிவினர் மிகவும் மோசமாக நடத்தப்படுவதாக அவர் குறைகூறினார்.
ஆனால் இதற்கான ஆதாரங்களை அவர் முன்வைக்கவில்லை.
“குறிப்பிட்ட சில பிரிவினரின் நிலங்களைத் தென்னாப்பிரிக்கா பறிமுதல் செய்கிறது. அதுமட்டுமல்லாது அவர்களை மிகவும் மோசமான வகையில் நடத்துகிறது,” என்று டுருத் சோஷியல் பதிவில் அதிபர் டிரம்ப் பதிவிட்டார்.
“இதை அமெரிக்கா சகித்துக்கொள்ளாது. இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பான முழு விசாரணை நிறைவடையும் வரை தென்னாப்பிரிக்காவுக்கு நிதி வழங்கப்படுவது நிறுத்திவைக்கப்படும்,” என்றார் அவர்.
தென்னாப்பிரிக்காவுக்குக் கிட்டத்தட்ட 440 மில்லியன் அமெரிக்க டாலர் (S$ 601.7 மில்லியன்) நிதி வழங்கப்படும் என்று 2023ஆம் ஆண்டில் அமெரிக்கா உறுதி அளித்ததாக அமெரிக்க அரசாங்கப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.