தென்கிழக்காசியாவில் வர்த்தக, முக்கியக் கனிம ஒப்பந்தங்களை எட்டிய டிரம்ப்

2 mins read
6029bac9-d9c2-4ae7-8aee-5b5fa7b65bf1
ஆசியான் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய வட்டாரத்தில் உள்ள தங்களின் நான்கு பங்காளி நாடுகளுடன் அமெரிக்கா பல்வேறு வர்த்தக, முக்கியக் கனிம ஒப்பந்தங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர்) கையெழுத்திட்டது.

வர்த்தகத்தில் காணப்படும் சமமற்ற சூழலைக் கையாளவும் விநியோகச் சங்கிலி முறைகளை விரிவுபடுத்தவும் அமெரிக்கா எண்ணம் கொண்டுள்ளது. அரியவகை மண் தாதுக்களை (rare earth metals) ஏற்றுமதி செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைச் சீனா முடுக்கிவிட்டுள்ள நிலையில் அமெரிக்கா இந்நடவடிக்கையை எடுக்கிறது.

ஆசியான் சந்திப்பில் கலந்துகொள்ள மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மலேசியாவுடனும் கம்போடியாவுடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துகொண்டார். அதோடு, தாய்லாந்துடன் வர்த்தகக் கட்டமைப்பு ஒப்பந்தத்தையும் திரு டிரம்ப் செய்துகொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தங்களின் மூலம் இந்நாடுகள் வரி மட்டுமின்றி வரி தொடர்பற்ற இடையூறுகளையும் கையாள எண்ணம் கொண்டுள்ளன.

இவற்றின்வழி மலேசியா, கம்போடியா, தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து 19 விழுக்காட்டு வரியை விதிக்கும். சில பொருள்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டது.

வியட்னாமுடனும் தாங்கள் இதுபோன்ற ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக வா‌ஷிங்டன் அறிவித்தது. அதன்படி, வியட்னாமிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருள்களுக்கு 20 விழுக்காடு வரி விதிக்கப்படும்.

சென்ற ஆண்டு, வியட்னாம் ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு, அந்நாடு இறக்குமதி செய்தவற்றின் மதிப்பைவிட 123 பில்லியன் டாலர் (159.6 பில்லியன் வெள்ளி) அதிகமாகப் பதிவானது. தங்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக ரீதியாக இருக்கும் இடைவெளியைக் குறைக்க கூடுதலான அமெரிக்கப் பொருள்களை வாங்க வியட்னாம் உறுதியளித்துள்ளது.

இதற்கிடையே, அரியவகை மண் தாதுக்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதைத் தடை செய்யாமலும் அதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்காமலும் இருக்க மலேசியா ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டது. மலேசியாவும் அமெரிக்காவும் அறிக்கை மூலம் இதனைத் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்