தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிரம்ப்பைக் கொல்ல முயற்சி; சந்தேக நபர் கைது

2 mins read
3462030c-7874-4dfc-9f43-1f8c54af476a
டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் ரயன் வெஸ்லி ரவுத் கைது செய்யப்பட்டார். குழிப்பந்து மைதானத்துக்கு அருகில் உள்ள புதர்களுக்குப் பின்னால் இருந்த ரவுத்தை நோக்கி அதிகாரிகள் சுட்டதாகவும் அதையடுத்து தாம் வைத்திருந்த ஏ.கே. 47 ரக துப்பாக்கியை ரவுத் அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. - படங்கள்: ராய்ட்டர்ஸ், இபிஏ
multi-img1 of 2

ஃபுளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனல்ட் டிரம்ப்பைக் கொல்ல ஆடவர் ஒருவர் முயற்சி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகவும் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தச் சம்பவம் அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 15ஆம் தேதி ஃபுளோரிடாவில் உள்ள வெஸ்ட் பாம் பீச்சில் நிகழ்ந்தது.

அப்போது டிரம்ப் குழிப்பந்து (கோல்ஃப்) விளையாடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

குழிப்பந்து மைதானத்துக்கு அருகில் உள்ள புதர்களுக்குப் பின்னால் இருந்த துப்பாக்கிக்காரனை நோக்கி அதிகாரிகள் சுட்டதாகவும் அதையடுத்து அந்த ஆடவர் தாம் வைத்திருந்த ஏகே 47 ரக துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது.

தப்பி ஓட முயன்ற சந்தேக நபரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஹவாயியைச் சேர்ந்த 58 வயது ரயன் வெஸ்லி ரவுத் என்று தி நியூயார்க் டைம்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் இதற்கு முன்பு எட்டு முறை கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு ஜூலை 13ஆம் தேதியன்று பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது அவரைக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது.

துப்பாக்கிக்காரன் சுட்டதில் டிரம்ப்பின் காதில் காயம் ஏற்பட்டது.

அந்தத் துப்பாக்கிக்காரனை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்நிலையில், செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியன்று டிரம்ப்பைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ரயன் வெஸ்லி ரவுத், உக்ரேன் போரில் போரிட்டு மடிய விருப்பம் தெரிவித்திருந்ததாக அறியப்படுகிறது.

“கிரகாவ்வுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து உக்ரேன் எல்லைக்குச் சென்று போரிட்டு மடிவேன்,” என்று 2022ஆம் ஆண்டில் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு சில வாரங்களில் எக்ஸ் தளத்தில் ரவுத் பதிவிட்டிருந்தார்.

“அப்போரைப் பொதுமக்கள் மாற்றியமைத்து எதிர்கால போர்களைத் தடுக்க வேண்டும்,” என்று சிக்னல் எனும் தகவல் செயலியில் அவர் பதிவிட்டிருந்தார்.

“மனிதாபிமானம், சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவற்றுக்கு ஆதரவு வழங்க ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும். சீன நாட்டவர்களுக்கு உதவ வேண்டும்,” என்று அவர் வாட்ஸ்அப் செயலியில் குறிப்பிட்டிருந்தார்.

ரவுத், வடகெரோலைனாவைச் சேர்ந்த முன்னாள் கட்டுமான ஊழியர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இரண்டாவது கொலை முயற்சி குறித்து டிரம்ப் மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

“நான் இருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதுகுறித்து புரளிகள் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு முன்பு, நடந்ததைப் பற்றி தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறேன்,” என்று டிரம்ப் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடமும் அதிபர் தேர்தலில் டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிசிடமும் தெரிவிக்கப்பட்டது.

டிரம்ப் பாதுகாப்புடன் இருப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

“அமெரிக்காவில் வன்முறைக்கு இடம் இல்லை,” என்று கமலா ஹாரிஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

குறிப்புச் சொற்கள்