வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வாஷிங்டன் நகரில் குற்றங்களைத் தடுக்கவும் சட்டவிரோதக் குடியேற்றப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் புதிய பணிக்குழுவை ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
வன்முறை, ஒழுக்கக்கேடு போன்றவற்றால் வாஷிங்டன் நகர் பாதிக்கப்பட்டுள்ளது என்று நீண்ட காலமாகக் கூறி வந்த திரு டிரம்ப், அந்த நிலையை அடியோடு மாற்றுவதற்கான உத்தரவில் வியாழக்கிழமை (மார்ச் 27) கையெழுத்திட்டார்.
கொலம்பியா மாவட்டம் என்று அழைக்கப்படும் வாஷிங்டன் நகரில் குற்றங்களை துடைத்தொழித்து குற்றவாளிகளைத் தண்டிப்பதன் மூலம் அதனை அழகானதாகவும் வளமிக்கதாகவும் மாற்றி அமைப்பதற்கான இலக்கை எட்ட முடியும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அரசாங்கம் ஏற்படுத்த இருக்கும் ‘வாஷிங்டன் பாதுகாப்பு மற்றும் வனப்பு பணிக்குழு’வில் திரு டிரம்ப் நிர்வாகத்தில் அதிகாரிகளும் சட்ட அமலாக்க அமைப்புகளைச் சேர்ந்தோரும் இடம்பெறுவர்.
குற்றங்களை ஒழிக்கவும் சட்டவிரோதக் குடியேறிகளைத் தண்டிக்கவும் அதிபர் கொண்டுள்ள முன்னுரிமைகளை அந்தக் குழு நிறைவேற்றும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, குற்றங்கள் மிகுந்த அமெரிக்க நகரங்கள் பற்றி முக்கியமாகப் பேசினார். அவற்றில் தலைநகர் வாஷிங்டன் பற்றி அடிக்கடி அவர் குறிப்பிட்டு வந்தார்.

