தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசடி நிலையங்களைக் குறிவைக்கும் டிரம்ப்

2 mins read
1ff9aee1-e345-4f26-8d6c-380103d40a6f
 மோசடி நிலையங்களைத் துடைத்தொழிக்கும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவில் அடிக்கடி அமலாக்க நடவடிக்கைகளும் நடக்கின்றன. - படம்: ஏஎஃப்பி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசடி நிலையங்கள்மீது கவனத்தைத் திருப்பியுள்ளார்.

மோசடி நிலையங்களின் கட்டமைப்புகள்மீதும் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்கள்மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும் அவர்களுக்குத் தொடர்ந்து நெருக்கடி தரவும் அது திட்டமிட்டுள்ளது.

இணைய மோசடி நிலையங்களால் அமெரிக்கர்கள் ஆண்டுக்குப் பல பில்லியன் டாலர் இழப்பதாக வா‌ஷிங்டன் கூறுகிறது.

மியான்மாரில் செயல்படும் ஒன்பது மோசடி நிலையங்கள்மீது தற்போது தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றுக்குப் பாதுகாப்பு வழங்கிச் செயல்பட உதவும் காரேன் தேசியப் படைமீது அமெரிக்கா ஏற்கெனவே பொருளியல் தடை விதித்துள்ளது.

அதேபோல் கம்போடியாவில் செயல்படும் 10 இணைய மோசடி நிலையங்கள்மீதும் தடை உத்தரவை விதித்துள்ளது அமெரிக்க அரசாங்கம்.

இந்த நிலையங்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் முதலீட்டு மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.

“தென்கிழக்கு ஆசியாவில் செயல்படும் மோசடி நிலையங்களால் நிதி இழப்பு மட்டும் ஏற்படுவதில்லை அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் நவீனக் கொத்தடிமைகளாக வேலை செய்யும் அபாயமும் ஏற்படுகிறது,” என்கிறது அமெரிக்கா.

நிதி சார்ந்து நடத்தப்படும் குற்றங்களைத் தடுக்கவும் அமெரிக்கர்களை மோசடியிலிருந்து காப்பாற்றுவதும் அதிகாரிகளின் கடமை என்று வா‌ஷிங்டன் கூறியது.

கடந்த ஆண்டு தரவுப்படி அமெரிக்கர்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசடி நிலையங்கள் தொடர்பான மோசடிகள்மூலம் மட்டும் 13 பில்லியன் வெள்ளிக்கு மேலான நிதியை இழந்ததாக அந்நாட்டு நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மோசடி நிலையங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. அதைத் தடுக்கும் நோக்கில் அதிபர் டிரம்ப் களமிறங்கியுள்ளார்.

மேலும், வேலை தேடும் பல இளையர்கள் இந்த நிலையங்கள்மூலம் ஈர்க்கப்படுவதும் கவலையைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், மோசடி நிலையங்களைத் துடைத்தொழிக்கும் நோக்கில் தென்கிழக்கு ஆசியாவில் அடிக்கடி அமலாக்க நடவடிக்கைகளும் நடக்கின்றன.

இதற்கிடையே கம்போடிய அரசாங்கம் மோசடி நிலையங்களுக்கு எதிராகப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மனித நேய ஆர்வலர்கள் குறைகூறியுள்ளனர்.

குற்றங்கள் நடப்பதைத் தெரிந்துகொண்டு அரசாங்கம் அமைதியாக இருப்பதாக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்