ஜகார்த்தா: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதித்திருப்பதைத் தொடர்ந்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தோனீசியா எண்ணம் கொண்டுள்ளது.
தென்கிழக்காசியாவின் ஆகப் பெரிய பொருளியலான இந்தோனீசியா மீது திரு டிரம்ப் 32 விழுக்காடு வரி விதித்துள்ளார். அதனையடுத்து வர்த்தக விதிமுறைகளைத் தளர்த்தப்போவதாக இந்தோனீசியா உறுதியளித்துள்ளது.
விதிமுறைகளைத் தளர்த்துமாறு இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார். வரி சம்பந்தமில்லாத வர்த்தகம் தொடர்பான தடைகளும் அவற்றில் அடங்கும்.
இந்தோனீசியா விதித்துள்ள வரிக்குப் பதிலடியாக அமெரிக்கா வரி விதித்ததைத் தொடர்ந்து திரு பிரபோவோ அவ்வாறு செய்வதாக இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
திரு டிரம்ப்பின் வரி விதிப்பால் ஏற்படக்கூடிய தாக்கத்தை இந்தோனீசியா ஆராய்ந்து வருகிறது. குறிப்பாக ஆடைகள், மின்சாரப் பொருள்கள், பனை எண்ணெய் போன்ற ஏற்றுமதிகளை அதிகம் சார்ந்திருக்கும் துறைகளைப் புதிய வரி பாதிக்கும் என்று பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டது.
வரும் புதன்கிழமை (ஏப்ரல் 9) நடப்புக்கு வரவிருக்கும் புதிய வரி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தோனீசியாவைப் பிரதிநிதிக்கும் அதிகாரிகள் குழு வாஷிங்டனுக்கு அனுப்பப்படும்.
புதிய வரி குறித்து அறிவிக்கப்படுவதற்கு முதல் நாளான கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1), இந்தோனீசியாவின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹர்ட்டார்ட்டோ, அமெரிக்கப் பிரதிநிதி கேரோல் மில்லருடன் காணொளிவழி மெய்நிகரில் சந்திப்பு நடத்தினார். இரு நாடுகளும் எந்தெந்த அம்சங்களில் ஒத்துழைக்கலாம் என்பது குறித்து அவ்விருவரும் பேசினர்.
இதற்கிடையே, தங்கள் மீது 46 விழுக்காட்டு வரி விதிக்கப்படுவதை ஒத்திவைக்குமாறு வியட்னாமின் வர்த்தக அமைச்சு, திரு டிரம்ப்பின் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது. வியட்னாம், அரசதந்திர ரீதியாக அந்த வேண்டுகோளை விடுத்தது.
தொடர்புடைய செய்திகள்
வியட்னாமின் தொழில், வர்த்தக அமைச்சர் நுயன் ஹோங் டியென், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர் இருவருக்கும் இடையே கூடுமானவரை விரைவில் தொலைபேசி உரையாடல் நடக்க வேண்டும் என்று வியட்னாம் எண்ணம் கொண்டுள்ளது.
வியட்னாம் அரசாங்கத்தின் இணையத்தளத்தில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு டிரம்ப்பின் வரி விதிப்பு ஒரு தேசிய நெருக்கடி என்று ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) குறிப்பிட்டுள்ளார்.
அதைக் கையாள இதுவரை காணாத அணுகுமுறை தேவை என்று அவர் கூறியுள்ளார்.
புதிய வரி விதிப்பால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் கையாள்வது குறித்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திரு இஷிபா திட்டமிட்டுள்ளார்.
அதேவேளை, திரு டிரம்ப்பின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நிதானமான அணுகுமுறையைப் பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
வரி விதிப்புக்குத் தகுந்த பதில் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கவேண்டும் என்று திரு இஷிபா சொன்னார்.
அந்த வகையில், வரி விதிப்புக்குப் பதிலடி தருவது, இந்த விவகாரத்தை உலக வர்த்தக அமைப்புக்குக் கொண்டு செல்வது போன்ற முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.