தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாகன இறக்குமதிக்கு வரிவிதிக்க டிரம்ப் திட்டம்

2 mins read
2a63aef5-5501-4cd1-b09f-601ec791c591
வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை (மார்ச் 24) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப். - படம்: ஏஎஃப்பி

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தாம் அறிவித்த அனைத்து வரிவிதிப்பு நடவடிக்கைகளையும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல்  அமல்படுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் திங்கட்கிழமை (மார்ச் 24) நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்ப் இதைச் சொன்னார். 

இதனால் சில நாடுகள் மீது விதிக்கப்படவிருந்த வரிவிதிப்பு தற்போதைக்கு நடப்பிற்கு வராது என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அது என்னென்ன வரிவிதிப்பு என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.  

இந்த அறிவிப்பால் பங்குச் சந்தை சற்று மீண்டு வருகிறது. மேலும் தங்கத்தின் விலை குறையத்தொடங்கியுள்ளது. 

இதற்கிடையே வாகனங்கள், மருந்து, அலுமினியம், பகுதி மின்கடத்தி உள்ளிட்ட துறைகளிலும் வரிவிதிப்பை விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றியும் தெளிவான விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்காமீது வரி விதித்துள்ள நாடுகள்மீது அதிபர் டிரம்ப் வரிவிதிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்தார். 

இதற்கிடையே வெனிசுவெலாவிடமிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு வாங்கும் நாடுகள்மீது கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கப் போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு செய்வதால் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பூசல் அதிகரிக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர். அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பால் தற்போது எண்ணெய் விலை கூடியுள்ளது. 

வரியைக் குறைக்கும் இந்தியா

இதற்கிடையே அமெரிக்காவுடனான வர்த்தகப் பூசலைத் தவிர்க்க இந்தியா 23 பில்லியன் டாலர் அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி குறைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம் 66 பில்லியன் டாலர் மதிப்புடைய ஏற்றுமதிகளுக்கான வரிவிதிப்பை இந்தியா தவிர்க்கலாம் என்று நம்பப்படுகிறது. 

இரு நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதற்கட்டமாக அமெரிக்காவின் பொருள்களுக்கு 55 விழுக்காடு வரி குறைப்பு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

இருப்பினும் இதுதொடர்பாக இந்திய அரசாங்கம் அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியிடவில்லை.

குறிப்புச் சொற்கள்