பிரசல்ஸ்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியப் பொருள்களுக்கு 50 விழுக்காடு வரி விதிக்க வலியுறுத்தியதைத் தொடர்ந்து, மே 23 அன்று ஐரோப்பிய ஆணையம், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கு மரியாதையைக் கொடுக்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தியது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மே 23ஆம் தேதி ஆப்பிள் உள்ளிட்ட திறன்பேசி நிறுவனங்களுக்கு 25 விழுக்காடு அடிப்படை வரி விதிக்கப்போவதாக மிரட்டியுள்ளார்.
திறன்பேசிகளுக்கு வரி இருக்கக்கூடாது என்றால் அவற்றை அமெரிக்காவில் தயாரிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
முதலில் ஆப்பிள் நிறுவனத்தை மட்டும் சுட்டிக்காட்டி வரி விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் ஒரு நிறுவனத்தின்மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதால் மொத்தக் திறன்பேசி நிறுவனங்களுக்கும் தற்போது அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரி என்றால் அது நியாயமாக இருக்காது. சாம்சுங் உள்ளிட்ட அனைத்து திறன்பேசி நிறுவனங்களும் புதிய விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்,” என்றார் அவர்.
இந்த வரிவிதிப்பு ஜூன் மாத இறுதியில் நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அதன் பொருள்களை அமெரிக்காவில் வடிவமைத்து சீனாவில் தயாரிக்கும். இது அதிபர் டிரம்புக்குப் பிடிக்காத ஒன்றாக உள்ளது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வர்த்தகப் பூசல் இருப்பதால் பிரச்சினை அதிகரிக்கும் என்று கருதிய ஆப்பிள் தனது தயாரிப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாற்றுவதாக அறிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும் அதற்கும் டிரம்ப் நிர்வாகம் எதிராக உள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனம் சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறது.
அமெரிக்கர்கள் பயன்படுத்தும் திறன்பேசிகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட வேண்டும், வேறு நாடுகளில் தயாராகும் திறன்பேசிகள் வேண்டாம் என்று தாம் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டிம் குக்கிடம் தெரிவித்ததாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார்.
ஐஃபோன்களை அமெரிக்காவில் தயாரிப்பது எளிதான காரியம் இல்லை. அதற்கான கட்டமைப்பும் கொள்கைகளும் உருவாக்கப் பல ஆண்டுகள் ஆகும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மற்ற நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் பொருள் தயாரிக்கப்பட்டாலும் சீனாவில் மட்டும் அது கிட்டத்தட்ட 90 விழுக்காடு பொருள்களைத் தயாரிக்கிறது.
சீனாவில் அதிகக் கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருப்பதால், 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐஃபோன்களை உற்பத்தி செய்யும் திட்டங்களை ஆப்பிள் விரைவுபடுத்தி வருகிறது.
ஆனால் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பிப்ரவரியில், ஒன்பது அமெரிக்க மாநிலங்களில் நான்கு ஆண்டுகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலரை (S$642 பில்லியன்) செலவிடுவதாக ஆப்பிள் கூறியது, ஆனால் அந்த முதலீடு அமெரிக்காவிற்கு ஐபோன் உற்பத்தியைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.