தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரஷ்யாவுக்கு டிரம்ப் மிரட்டல்: புதிய தடைகளை விதிப்பேன்

2 mins read
4e037bbd-a64d-41be-86d3-402f03efe7a1
ரஷ்யா தாக்கியதையடுத்து கியவ்வில் உள்ள அரசாங்கக் கட்டத்தில் தீ மூண்டதைக் காட்டும் படத்தை உக்ரேனின் அவசரகால சேவை செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டது. - படம்: ஏஎஃப்பி

கியவ்: ரஷ்யா, இதுவரை இல்லாத அளவுக்கு உக்ரேனை மிக மோசமாகத் தாக்கியிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7) முற்பகுதியில் ரஷ்யாவின் ஏவுகணைகளும் வானூர்திகளும் மழை போல உக்ரேன் தலைநகரைத் தாக்கின. நான்கு பேர் இதில் உயிரிழந்தனர். அரசாங்க அலுவலகங்கள் தீப்பற்றி எரிந்தன.

இதையடுத்து ரஷ்யா மீது புதிய தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டியிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய திரு டிரம்ப், ”தற்போதைய சூழ்நிலை மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை,” என்றார்.

மாஸ்கோமீது புதிய தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்காவிடமிருந்து வலுவான தக்க பதிலை எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிபர் டிரம்ப்புக்கும் அதிபர் புட்டினுக்கும் இடையே நடைபெற்ற சண்டை நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது.

கியவ் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு நகரத்தின் மையத்தில் அமைந்திருக்கும் உக்ரேனிய அமைச்சரவை கூடும் அரசாங்கக் கட்டடத்தின் கூரையிலிருந்து தீ கிளம்பியது. மூன்றரை ஆண்டுகளாக நீடிக்கும் சண்டையில் இம்முறைத்தான் கியவ் அரசாங்கக் கட்டடங்கள் தாக்கப்பட்டுள்ளன.

வானூர்திகளின் தாக்குதலில் உக்ரேனியத் தலைநகரில் உள்ள உயர்மாடி கட்டடங்கள் சேதமடைந்தன என்று உக்ரேனின் அவசரகால சேவை தெரிவித்தது.

ஆனால் உக்ரேனில் பொதுமக்களுக்கு இலக்கு வைத்ததாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத்தது.

கியவில் உள்ள தளவாடங்களையும் ஆலைகளையும் மட்டுமே குறி வைத்ததாக ரஷ்யத் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.

கியவ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மற்ற இடங்கள் தாக்கப்படவில்லை என்றும் அது கூறியது.

திரு ஸெலன்ஸ்கி, உலகத்தின் பொறுமையை புட்டின் சோதிப்பதாகக் கூறியுள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து ரஷ்யாவுக்கு எதிரான வலுவான எதிர்ப்பை எதிர்பார்க்கிறோம். அதுதான் எங்களுக்குத் தேவை என்றார் அவர்.

சென்ற சனிக்கிழமையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முற்பகுதி வரை ரஷ்யா ஏறக்குறைய 810 வானூர்திகளையும் 13 ஏவுகணைகளையும் கொண்டு உக்ரேனைத் தாக்கியிருக்கிறது என்று உக்ரேனிய விமானப் படை தெரிவித்தது.

உக்ரேனியப் பிரதமர் வெளியிட்ட காணொளி ஒன்று, அரசாங்கக் கட்டத்தின் தரைத் தளங்கள் சேதமடைந்திருந்ததைக் காட்டியது.

குறிப்புச் சொற்கள்