வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பால்டிமோருக்குப் படையினரை அனுப்பப்போவதாக மிரட்டியிருக்கிறார். குற்றங்களைக் குறைக்க அவ்வாறு செய்வது உதவியாக இருக்கும் என்றார் அவர்.
நகரில் பாதுகாப்பாக உலாப்போக வருமாறு மேரிலேண்ட் ஆளுநர் வெஸ் மூர், திரு டிரம்ப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிபரின் கருத்து வந்துள்ளது.
திரு மூர் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்.
தேசியப் பாதுகாப்புப் படைகளை ஜனநாயகக் கட்சியினரின்கீழ் உள்ள நகரங்களுக்கு அனுப்பிவைக்கத் திரு டிரம்ப் முயல்கிறார். குற்றச்செயல்களைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதி அது என்றார் அவர்.
உள்நாட்டுச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ராணுவத்தினரைப் பயன்படுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு படையினரை அனுப்புவது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று ஆளுநர் ஒருவர் சொன்னார்.
வரும் வாரங்களில் ஏறக்குறைய 1,700 தேசியப் பாதுகாப்புப் படையினர் 19 மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்று அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.
ஆளுநர் மூர், திரு டிரம்ப்பின் உத்திகளை அடிக்கடி குறைகூறுவதுண்டு.
தொடர்புடைய செய்திகள்
குற்றங்களைக் குறைக்க வேண்டும் என்று திரு டிரம்ப் கூறியது உண்மை நிலவரம் அவருக்குப் புரியவில்லை என்பதைக் காட்டுவதாகத் திரு மூர் சொன்னார்.
“அவர் எங்கள் சமூகங்களுக்கு வந்ததில்லை. எங்களின் தெருக்களில் நடந்ததில்லை. எங்களைப் பற்றி இவ்வாறு குறைகூறுவதில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்,” என்று திரு மூர் சொன்னார்.
“அதிபர் என்ற முறையில் நான் அங்கு போகும் முன்னர், குற்றங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும்,” என்று திரு டிரம்ப் அவரின் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ஜனநாயகக் கட்சியின் வசமுள்ள வாஷிங்டன் டி சிக்குக் கிட்டத்தட்ட 2,000 படையினரை அனுப்பியுள்ளார். அதன் பிறகு நூற்றுக்கணக்கானோர் கைதுசெய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டது.