வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சுவிட்சர்லாந்திலிருந்து வந்த பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசியதாகக் கூறியுள்ளார்.
அவர்களுடன் கூடுதல் பேச்சுவார்த்தைகளை நடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்து வேறு எந்த வளர்ந்த நாடுகளைவிடவும் வரி விகிதத்தைக் குறைக்க முயற்சி செய்கிறது.
“சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட பிரதிநிதிகளைச் சந்தித்தேன். அது, எனக்குப் பெருமையாக இருந்தது,” என்று திரு டிரம்ப் நவம்பர் 4ஆம் தேதி சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“பல விவகாரங்கள் பற்றிப் பேசினோம். முக்கியமாக வர்த்தகம், வர்த்தக இடைவெளி குறித்து விவாதித்தோம். அதோடு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. அந்தப் புரிதலுடன் எங்களுடைய வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரியர், சுவிட்சர்லாந்து தலைவர்களுடன் பேச்சு நடத்துவார்,” என்று அவர் மேலும் கூறினார்.
திரு டிரம்ப், சுவிட்சர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 39 விழுக்காடு வரி விதித்துள்ளார்.
இதனால் லிண்ட் சாக்லெட் தயாரிப்பு நிறுவனம், கைக்கடிகாரங்களைத் தயாரிக்கும் சுவாட்ச் குழுமம், ரோலக்ஸ் எஸ்ஏ போன்றவற்றுக்குச் செலவு அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
புளூம்பெர்க் எக்கனாமிக்ஸ் புள்ளிவிவரங்களின்படி அமெரிக்காவுக்கான சுவிட்சர்லாந்தின் ஏற்றுமதிகளில் ஏறக்குறைய பாதி அளவு மருந்துப் பொருள்களாகும்.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கக் கட்டிகள் மீது வரிகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்கா கைவிட்டது. இந்தத் திட்டம் உலகளாவிய சந்தைகளில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதோடு விநியோகங்களைப் பாதிக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.

