தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘உக்ரேன் அமைதித் திட்டம்’: விலகியிருக்க விரும்பும் டிரம்ப் தரப்பு

2 mins read
92c29c8f-9d0a-4e53-ae8b-92e0511aa10b
உக்ரேனின் ஒடேசா நகரில் ர‌ஷ்யத் தாக்குதலால் ஏற்பட்ட சேதம். - படம்: ராய்ட்டர்ஸ்

வா‌ஷிங்டன்: அடுத்த அமெரிக்க அரசாங்கம், உக்ரேனில் அமைதியைக் கொண்டுவருவதற்குத்தான் முன்னுரிமை வழங்கும் என்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆலோசனை வழங்கும் பொறுப்பில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கிரைமியா உட்பட ர‌ஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்கு டிரம்ப் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்காது என்றும் பிரயன் லேன்ஸா என்ற அந்த அதிகாரி சனிக்கிழமையன்று (நவம்பர் 9) பிபிசி ஊடகம் ஒளி[Ϟ]பரப்பிய நேர்காணலில் குறிப்பிட்டார். திரு டிரம்ப் தலைமையில் அமையவுள்ள அமெரிக்க அரசாங்கம், அமைதியைக் கொண்டு வருவதற்கான ஆக்ககரமான திட்டத்தை வரையுமாறு உக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைக் கேட்டுக்கொள்ளும் என்றும் அவர் சொன்னார்.

“கிரைமியா கிடைத்தால்தான் அமைதி இருக்கும் என்று (உக்ரேன்) அதிபர் ஸெலென்ஸ்கி எங்களிடம் கூறினால் அவர் நிலைமையைச் சரிவரக் கையாளும் நோக்கில் இல்லை என்று அர்த்தமாகும்,” என்றார் திரு லேன்ஸா.

எனினும், திரு லேன்ஸா, திரு டிரம்ப்பின் சார்பில் அவ்வாறு பேசவில்லை என்று திரு டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்கும் பணிகளை மேற்கொள்ளும் குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார். அந்தப் பேச்சாளர் தனது பெயரை வெளியிட மறுத்தார்.

திரு லேன்ஸா, திரு டிரம்ப்பின் பிரசாரக் குழுவுக்காகப் பணியாற்றியவர் என்றும் அவர் திரு டிரம்ப்பின் சார்பில் பணியாற்றுபவர் அல்ல என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

போரை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டுவரும் தீர்வைத் தாம் கண்டுபிடிக்கப்பபோவதாக திரு டிரம்ப், தமது தேர்தல் பிரசாரத்தின்போது கூறியிருந்தார். ஆனால், அது எப்படி செய்யப்படும் என்பது குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

இவ்வாண்டின் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து சுமார் ஒரு வாரத்துக்குப் பிறகு திரு ஸெலென்ஸ்கியும் திரு டிரம்ப்பும் தொலைபேசியில் பேசிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த உரையாடலில் திரு டிரம்ப்பின் ஆதரவாளரான செல்வந்தர் எலன் மஸ்க் பங்கேற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்