வாஷிங்டன்: ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் கிளர்ச்சிக் குழு இஸ்ரேலுடனான போரை 60 நாள்களுக்கு நிறுத்தும்படி முன்வைக்கப்படும் இறுதி உடன்பாட்டுக்கு ஒப்புக்கொள்ளும்படி அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (ஜூலை 1) கூறியுள்ளார்.
அந்த உடன்பாடு கத்தார், எகிப்து ஆகியவற்றின் அதிகாரிகளால் ஹமாஸிடம் கொடுக்கப்படும்.
இஸ்ரேல் 60 நாள் சண்டைநிறுத்த உடன்பாட்டை எட்டுவதற்கான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாகத் திரு டிரம்ப் குறிப்பிட்டார். அது நடப்பில் இருக்கும்போது போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்துத் தரப்புகளுடன் செயல்படப்போவதாகவும் அவர் கூறினார்.
கத்தார், எகிப்து ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஹமாஸ் தரப்பிடம் அந்த இறுதி பரிந்துரையை வழங்குவர் என்று திரு டிரம்ப் சொன்னார்.
“மத்திய கிழக்கின் நன்மைக்காக ஹமாஸ் அந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகிறேன். அதைவிட சிறந்த உடன்பாடு கிடைக்காது. அது இன்னும் மோசமாகத்தான் ஆகும்,” என்று திரு டிரம்ப் வலியுறுத்தினார்.
இஸ்ரேலுக்கும் காஸாவில் உள்ள ஹமாஸ் தரப்புக்கும் இடையே பிணையாளிகளின் பறிமாற்றம் அடுத்த வாரத்துக்குள் நடைபெறும் என்றும் திரு டிரம்ப் நம்புவதாகச் செய்தியாளர்களிடம் கூறினார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர முன்வைக்கப்படும் எந்தவித ஒப்பந்தத்தின் கீழும் காஸாவில் உள்ள பிணையாளிகளை விடுவிக்க ஹமாஸ் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது.
ஹமாஸ் ஆயுதங்களைக் களைந்தால் மட்டும் போரை முடித்துக்கொள்ள முடியும் என்று இஸ்ரேல் சொன்னது. ஆனால் ஆயுதங்களைக் கைவிட ஹமாஸ் இணங்குவதாக இல்லை.