வாஷிங்டன்/துபாய்/ஜெருசலம்: ஈரான் எந்தவொரு நிபந்தனையுமின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வலியுறுத்திய சில மணி நேரங்களில் இஸ்ரேல்மீது அதிவேக ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
திரு டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கைக்குப் பதிலடி தரும் விதமாக எக்ஸ் தளத்தில் ஆயத்துல்லா அலி காமெனி வெளியிட்ட பதிவில், “போர் தொடங்குகிறது. பயங்கரவாத யூத தேசியவாத ஆட்சி முறைக்கு நாங்கள் வலுவான பதிலடி தரவேண்டும். யூத தேசியவாதிகளுக்கு நாங்கள் கருணை காட்டமாட்டோம்,” என்று தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே ஆறாவது நாளாக மோதல் நிலவிவரும் வேளையில், புதன்கிழமை (ஜூன் 18) புதிய ஏவுகணைத் தாக்குதல்களை இரு நாடுகளும் நடத்தின.
ஈரானின் தாக்குதல்களை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியது. டெல் அவிவ் நகரில் வெடிப்புச் சத்தத்தைக் கேட்க முடிந்தது.
ஈரானிய ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய ஆகாயப்படை தாக்கியது. தலைநகர் டெஹ்ரானிலிருந்து வெளியேறும்படி மக்களிடம் முன்னதாக இஸ்ரேல் கூறியிருந்தது. டெஹ்ரானிலும் அதற்கு மேற்கில் கராஜ் நகரில் வெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரானிய செய்தித் தளங்கள் குறிப்பிட்டன.
இந்நிலையில், அமெரிக்காவுக்குப் பொறுமை குறைந்து வருவதாக திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் எச்சரித்தார்.
ஈரானின் தலைவரைக் கொல்வதற்கு ‘இப்போதைக்கு’ நோக்கம் இல்லை என்று அவர் கூறினாலும், அவரது கருத்துகள் ஈரான் மீதான இன்னும் கடுமையான நிலைப்பாட்டைக் காட்டின.
“உச்சமன்றத் தலைவர் எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது பற்றி எங்களுக்குச் சரியாகத் தெரியும். இப்போதைக்கு அவரை நாங்கள் கொல்லப்போவதில்லை. ஆனால், எங்களுக்குப் பொறுமை குறைந்து வருகிறது,” என்று திரு டிரம்ப் அப்பதிவில் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மூன்று நிமிடங்கள் கழித்து அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “எந்தவொரு நிபந்தனையுமின்றி சரணடையுங்கள்” என்று ஈரானுக்கு உத்தரவிட்டார்.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் திரு டிரம்ப் செவ்வாய்க்கிழமை தொலைப்பேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் சொன்னார்.
இதற்கிடையே, ஈரானின் உச்சமன்றத் தலைவர் ஆயத்துல்லாவுக்கு ஈராக் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு ஏற்பட்ட அதே கதி ஏற்படக்கூடும் என்று இஸ்ரேலியத் தற்காப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்தார். அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பின்போது ஆட்சியிலிருந்து கவிழ்த்தப்பட்ட சதாம் ஹுசேன், வழக்கு விசாரணைக்குப் பிறகு 2006ல் தூக்கிலிடப்பட்டார்.
“இஸ்ரேலியக் குடிமக்களுக்கு எதிராக போர்க் குற்றங்களைப் புரிந்து ஏவுகணைகளைப் பாய்ச்சும் ஈரானிய சர்வாதிகாரியை நான் எச்சரிக்கிறேன்,” என்று உயர்மட்ட இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளிடம் திரு காட்ஸ் கூறினார்.
இப்பூசலில் அமெரிக்கா ஈடுபடவுள்ளதற்கான அறிகுறி இல்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் சொன்னார்.
இந்த மோதல் குறித்து கலந்தாலோசிக்க செவ்வாய்க்கிழமை திரு டிரம்ப் தமது தேசிய பாதுகாப்பு மன்றத்தைச் சந்தித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.