வாஷிங்டன்: துபாயிலிருந்து டெல் அவிவ் சென்ற ஃபிளைதுபாய் விமானத்தை நொறுங்கச் செய்ய விமானி ஒருவர் முயன்ற சம்பவத்தில் ஈரானுக்குப் பங்கிருக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
அது உண்மையெனில் ஈரான்மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் வியாழக்கிழமை (அக்டோபர் 1) எச்சரித்தார்.
விமானம் நொறுங்கி விழாமல் பயணிகள் அதனைக் காப்பாற்றுவதற்கு முன்பாக, இணை விமானி முதன்மை விமானியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில், ஈரானுக்குப் பங்கு உள்ளதா என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் அதிபர் டிரம்ப்பிடம் கேட்டனர்.
“எனக்குக் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ‘ஆம்’ என்றே சொல்வேன், ஆனால் இது குறித்து நாங்கள் தற்போது தீவிரமாகப் பேசி வருகிறோம்,” என்று அவர் பதிலளித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரானே காரணம் என்றால் அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்ற கேள்விக்கும் திரு டிரம்ப் பதில் தந்தார்.
“அவர்கள்மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும், கவலைப்பட வேண்டாம்,” என்று அவர் கூறினார்.
ஈரான் போர் குறித்துத் திரு டிரம்ப் ஒட்டுமொத்தமாகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள வேளையில், இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
