ரியாத்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அரபு நாடுகளுக்கு நான்கு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
அவர் செவ்வாய்க்கிழமை (மே 12) சவூதி அரேபியாவைச் சென்றடைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் அதிபர் டிரம்ப் செல்லவிருக்கிறார்.
இந்த மூன்று நாடுகளின் தலைவர்களுடன் அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
பேச்சுவார்த்தையின்போது பொருளியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த செல்வாக்குமிக்க வர்த்தகத் தலைவர்களும் அதிபர் டிரம்ப்புடன் இருப்பர்.
வியாழக்கிழமையன்று (மே 15) தாம் துருக்கிக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்று அதிபர் டிரம்ப் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது இதுவே இரண்டாவது முறை.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யா-உக்ரேன் போருக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அதிபர் டிரம்ப், புதிய போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்க இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வாரயிறுதியில் அமெரிக்க அதிகாரிகளுக்கும் ஈரானிய அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை ஓமானில் நடைபெற்றது.
ஈரானின் அணுவாயுதத் திட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக விரிவாகப் பேசப்பட்டது.
இதுதொடர்பாக அரசதந்திர முயற்சிகள் தோல்வி அடைந்தால் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே அமெரிக்காவில் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு சிற்றரசுகள் பல டிரில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள முதலீடுகளை அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவில் 600 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்போவதாக சவூதி அரேபியா ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
ஆனால் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும்படி சவூதி அரேபியாவைக் கேட்டுக்கொள்ளப்போவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.