எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தடுத்து வரி உயர்த்தப்படும்: டிரம்ப் சூளுரை

2 mins read
5e44b7eb-56c0-4f41-af00-142bf8b18a4e
கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வதற்குத் தடையாக இருக்கும் டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆரம்பமாக பிப்ரவரி 1 முதல் பத்து விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்குவதை அனுமதிக்கும் வரை ஐரோப்பிய நாடுகளுக்கு அடுத்தடுத்து வரி உயர்வு அமுல்படுத்தப்படும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் ஜனவரி 17ஆம் தேதி சூளுரைத்துள்ளார். இதையடுத்து ஆர்க்டிக் தீவான கிரீன்லாந்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. “டென்மார்க், நார்வே, சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஃபின்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு பிப்ரவரி 1 முதல் கூடுதலாக பத்து விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும்,” என்று டுருட் ஊடகத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அத்தகைய வரி ஜூன் 1ஆம் தேதி 25 விழுக்காட்டுக்கு உயர்த்தப்படும். அமெரிக்கா, கிரீன்லாந்தை வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டும் வரை வரி உயர்வு தொடரும் என்று அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க்கின் சுயாட்சி பகுதியாக கிரீன்லாந்து தீவு உள்ளது. அதனை, அமெரிக்கா வாங்கும் வரை வேறு எதற்கும் தான் இணங்கப் போவதில்லை என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். டென்மார்க்கும் கிரீன்லாந்தும் கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல, அமெரிக்காவின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளன. இதற்கிடையே அமெரிக்க குடியிருப்பாளர்களிடையே நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ் / இப்சோசிஸ் ஆய்வில் ஐந்தில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவானவர்களே கிரீன்லாந்தைக் கைப்பற்றும் யோசனையை ஆதரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து முக்கியம். அது, அமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், அங்குள்ள ஏராளமான கனிம வளங்கள் ஆகியவை அதற்கு காரணமாகும். அதனை மற்ற நாடுகள் கைப்பற்றாமல் இருப்பதற்கு இதுவே சிறந்த வழி என்கிறார் டிரம்ப். கிரீன்லாந்தை ராணுவத்தின் மூலம் பலவந்தமாகக் கைப்பற்றவும் டிரம்ப் தயாராக இருக்கிறார். இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள், கிரீன்லாந்துக்கு படைகளை அனுப்பி வருகின்றன. இப்படி படைகளை அனுப்பும் நாடுகள் ஆபத்தான விளையாட்டை விளையாடுவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், ஆபத்தான சூழலை அவை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார். தற்போது கிரீன்லாந்தில் நேட்டோ நாடுகள் படைகளைக் குவித்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள், டிரம்பின் வரி விதிப்பால் ஆபத்தான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர். “ஐரோப்பா ஒற்றுமையாகவும் ஒருங்கிணைந்தும், அதன் இறையாண்மையை பாதுகாக்க உறுதியாகவும் இருக்கும்," என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஊர்சுலா வான் டெர் லேயனும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் எக்ஸ் பதிவில் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்