அமெரிக்க அதிபரும் இஸ்ரேலியப் பிரதமரும் பேச்சு

ஈரானுக்கும் ஹமாசுக்கும் எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

2 mins read
1147f9f0-9e80-4a57-8def-27fab471eb08
ஃபுளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவும் சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

பாம் பீச் (ஃபுளோரிடா): ஈரான்மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்துவதற்கு வா‌ஷிங்டன் ஆதரவளிக்கக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். ஈரான், புவியீர்ப்பு ஏவுகணைகளையும் அணுசக்தி ஆயுதங்களையும் மீண்டும் தயாரிக்கத் தொடங்கினால் அதற்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

ஹமாஸ் குழு, அதன் ஆயுதங்களைக் களையவில்லை என்றால் கடும் விளைவுகளை அது சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் திரு டிரம்ப் சொன்னார்.

ஃபுளோரிடாவின் பாம் பீச் நகரில் உள்ள தமது மார்-அ-லாகோ பொழுதுபோக்குத்தலத்தில் திரு டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவைச் சந்தித்த பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அதனைத் தெரிவித்தார்.

ஜூன் மாதம், ஈரான்மீது அமெரிக்கா பெருந்தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு, ஆயுதத் திட்டத்தை டெ‌‌ஹ்ரான் தொடங்கியிருக்கக்கூடும் என்று திரு டிரம்ப் சொன்னார்.

“அவர்கள் எங்கே செல்கின்றனர் என்பதும் என்ன செய்கின்றனர் என்பதும் எங்களுக்குத் தெரியும். இரு பக்கமும் போய்வர 37 மணிநேரமாகும். அதிக எரிபொருளை வீணாக்க நான் விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

ஈரான் குறித்தும் லெபனானில் ஹிஸ்புல்லா பற்றியும் இஸ்ரேல் அக்கறை தெரிவித்ததாகத் திரு டிரம்ப் சொன்னார்.

ஜூன் மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 12 நாள் போர் நடந்தது. இம்மாதம் இரண்டாம் முறையாய் ஏவுகணைப் பயிற்சியில் ஈடுபட்டதாக டெஹ்ரான் தெரிவித்தது.

காஸா அமைதி உடன்பாட்டின் அடுத்த கட்டம் குறித்தும் தலைவர்கள் இருவரும் விவாதித்தனர்.

அக்டோபரில் எட்டப்பட்ட உடன்பாட்டை மீறியதாக இஸ்ரேலும் ஹமாசும் ஒன்றை மற்றொன்று குற்றஞ்சாட்டுகின்றன.

ஆயுதக்களைவுக்கு இணங்க மறுக்கிறது ஹமாஸ். காஸா வட்டாரத்தில் மீண்டும் தனது கட்டுப்பாட்டை உறுதிசெய்ய அது முற்படுகிறது.

அமைதியான முறையில் ஹமாஸ் ஆயுதங்களைக் களையவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படும் என்று இஸ்ரேல் கோடிகாட்டியுள்ளது.

இந்நிலையில் ஹமாஸ், ஆயுதங்களைக் களையவில்லை என்றால் விளைவு படுமோசமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர்.

குறிப்புச் சொற்கள்