வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அரசாங்கம், அனைத்துலக மாணவர்கள், குறிப்பாக சீனாவிலிருந்து வரும் மாணவர்களைப் பெரிதாக ஆதரிப்பதில்லை.
ஆனால் அதற்கு நேர் எதிராக, அமெரிக்காவுக்கு சீன மாணவர்கள் அவசியம் என்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 600,000 சீன மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
“மாணவர்கள் இங்கு வர முடியாது என்று சொல்வது மிகவும் அவமானத்துக்குரியது,” என்று வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் திரு டிரம்ப் கூறினார்.
“அவர்கள் வராவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியுமா? நமது பல்கலைக்கழக கட்டமைப்பு கூடிய விரைவில் நாசமாகிவிடும்,” என்றார் அவர்.
எனினும், அனைத்துலக மாணவர்களை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேரும்படி சொல்வது சற்று கால தாமதமான ஒன்று என கருதப்படுகிறது.
பல்வேறு பல்கலைக்கழகங்களில் அடுத்த கல்விப் பருவம் தொடங்கும் வேளையில் அனைத்துலக மாணவர்கள், குறிப்பாக சீனாவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்குள் நுழைவதைத் திரு டிரம்ப்பின் நிர்வாகம் ஏற்கெனவே சிரமமாக்கியுள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்தில் அனைத்துலக மாணவர்களுக்கான சோதனைகளை டிரம்ப் நிர்வாகம் மேலும் கடுமையாக்கியது.
அதையடுத்து சீனா, இந்தியா, நைஜீரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு விசா கிடைப்பது சிரமமாகியது.
புதிய விசா பிரச்சினையால் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சேரும் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கை 30லிருந்து 40 விழுக்காடு வரை சரியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
திரு டிரம்ப் நிர்வாகம், ஆயிரக்கணக்கான அனைத்துலக மாணவர்களின் விசாக்களையும் ரத்து செய்தது. அது சீனாவிலிருந்து வந்த மாணவர்கள் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருக்கக்கூடும் என்று கூறியது.
எனினும் திரு டிரம்ப் அண்மையில் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்துவருகிறார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) தென்கொரிய அதிபரைச் சந்தித்த திரு டிரம்ப், சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் என்றார்.
“சீன மாணவர்களை நாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்று கூறுகிறார்கள். நாங்கள் அனுமதிக்கப்போகிறோம். அது மிகவும் மிக்கியம்,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.