வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக்கிடம் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டில் ஐஃபோன்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திரு டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்துடன் பேசியுள்ளார்.
அண்மையில் சீனாமீது டிரம்ப் நிர்வாகம் கூடுதல் வரி விதித்ததால் ஐஃபோன்களின் இறக்குமதி வரி அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் தனது ஐஃபோன்களில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உள்ளன, அதற்காகத்தான் விலை ஏற்றப்படவுள்ளது என்று ஆப்பிள் தரப்பு கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அது அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்காக டிம் குக் அதிக உற்பத்தி ஆலைகளை அமெரிக்காவில் உருவாக்க இருப்பதாக திரு டிரம்ப் கூறியுள்ளார்.
அவர் தமது முதல் தவணையில் அதிபராக இருந்தபோது ஆப்பிள் நிறுவனம் வரிவிதிப்பிலிருந்து தப்பியது. இருப்பினும் புதிய நிலவரத்தால் ஆப்பிள் நிறுவனத்திற்கு இக்காலாண்டில் US$900 மில்லியன் வரை நட்டம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
சீனாமீது திரு டிரம்ப் அதிக கவனம் செலுத்துவதால் ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பாலான உற்பத்தியை இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் அது நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.