வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், உக்ரேனுக்கான அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சில நாள்களுக்கு முன்பு வெள்ளை மாளிகையில் டிரம்புக்கும் உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கிக்கும் இடையே உலக ஊடகங்கள் முன்பு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கனிமவள ஒப்பந்தத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திடாமலும் ஸெலன்ஸ்கி சென்று விட்டார்.
இதையடுத்து உக்ரேனுக்கு தற்போதைய அனைத்து ராணுவ உதவிகளையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஸெலன்ஸ்கி நல்லெண்ணத்துடன் அமைதிக்கு கடப்பாடு தெரிவிப்பார் என்று அதிபர் டிரம்ப் முடிவு செய்யும் வரை தடை நீடிக்கும் என்று அமெரிக்காவின் மூத்த தற்காப்புத் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது உக்ரேனில் இல்லாத அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று தன்னைப் பற்றி அடையாளம் தெரிவிக்க விரும்பாத அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
விமானத்தில் அல்லது கப்பலில் அனுப்ப வேண்டிய அல்லது போலந்து வழியாக அனுப்பும் தருவாயில் உள்ள ராணுவ ஆயுதங்கள் இவற்றில் உள்ளடக்கம்.
திரு டிரம்ப், தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்திடம் ராணுவ உதவிகளை நிறுத்தும் உத்தரவுகளைப் பிறப்பிக்க உத்தரவிட்டார் என்று அதிகாரி மேலும் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உக்ரேனிய-ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவர திரு டிரம்பு உறுதியுடன் செயல்பட்டு வருகிறார்.
ஆனால் ரஷ்யா சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறாது என்ற உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்க முன்வராததால் அமைதி ஒப்பந்தத்துக்கு தான் தயாரானதும் திரும்பி வருவதாகக் கூறி கோபத்துடன் ஸெலன்ஸ்கி சென்று விட்டார்.
இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ஸெலன்ஸ்கிக்கு ஆதரவாக அணிவகுத்து நின்றுள்ளன.
உக்ரேனிய அதிபர் ஸெலன்கியை கைவிட மாட்டோம் என்றும் ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.