மெக்சிகோ நகரம், வாஷிங்டன், ஒட்டாவா: மெக்சிகோ, கனடா நாடுகளுக்கு எதிரான கடுமையான வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் 30 நாள்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை டிரம்ப் எல்லைப் பிரச்சினையில் அந்த இரண்டு நாடுகளும் சலுகைகளை அறிவித்துள்ளதாலும் குற்றச்செயல்களை தடுக்க உதவி புரிவதாக கூறியதாலும் வரி விதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (பிப்ரவரி 3ஆம் தேதி) விளக்கமளித்தார்.
எனினும், சீனாவுக்கு எதிரான வரி விதிப்பு தொடரும் என்றும் அது விரைவிலேயே, சில மணிநேரங்களில், நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் மெக்சிகோ அதிபர் கிளோடிய ஷெயின்பாமும் சட்டவிரோதக் குடிநுழைவு, போதைப் பொருள் கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக எல்லையை வலுப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவ்விரு நாடுகளின் இந்தச் சலுகை அறிவிப்பைத் தொடர்ந்து அவற்றுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4ஆம் தேதி) நடைமுறைக்கு வரவிருந்த 25 விழுக்காடு வரி விதிப்பு 30 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்படும்.
குற்றக் கும்பல் நடவடிக்கைகள், ஃபெட்டனில் போதைப் பொருள் கடத்தல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் ஆகியவற்றை தடுக்க எல்லையில் தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பை வலுப்படுத்தவும் கனடா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெக்சிகோ, தனது எல்லையில் 10,000 தேசிய பாதுகாப்புப் படையினரை நிறுத்தி சட்டவிரோதக் குடிநுழைவு, போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை தடுக்க உறுதி கூறியுள்ளது.
இதற்குப் பதிலாக அமெரிக்காவும் தன் பங்குக்கு உயர் ரக தாக்குதல் ஆயுதங்கள் மெக்சிகோ செல்வதை தடுக்க உறுதி கூறியுள்ளதாக திருவாட்டி ஷெயின்பாம் விளக்கினார்.
தொடர்புடைய செய்திகள்
“அதிபர் என்ற முறையில், அனைத்து அமெரிக்கர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது எனது கடமை. அதை தான் நான் செய்கிறேன். இப்பொழுது நடந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பெருமிதத்துடன் சமூக ஊடகத் தளத்தில் கூறினார்.
மெக்சிகோ, கனடா நாடுகளுடனான இந்த உடன்படிக்கை உலகம் வர்த்தகப் போரில் சிக்கித் தவிப்பதை இப்போதைக்காவது நிறுத்தி வைக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கா-சீனாவுக்கு இடையே பரந்த அளவிலான வர்த்தகப் போரை தவிர்க்கும் எண்ணத்தில் வரி விதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில், இந்த வாரத்திலேயே, சீன அதிபர் ஸி ஜின் பிங்குடன் பேச உள்ளதாக அதிபர் டிரம்ப்பின் பேச்சாளர் விளக்கினார். .

