வாஷிங்டன்: ரஷ்யா-உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கலந்துகொள்ளத் தேவையில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமைதியை நிலைநாட்டுவது தொடர்பாகப் பேச உக்ரேனிடம் எதுவும் இல்லை.
உக்ரேன் தொடர்ந்து மீசையை முறுக்குகிறது என்றும் அமைதி திரும்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அதன் பங்களிப்பு மிகவும் குறைவு என்றும் அதிபர் டிரம்ப் சாடினார்.
“போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்டுவது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் பேசினேன். கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இருந்தது. ஆனால் திரு ஸெலென்ஸ்கியுடனான கலந்துரையாடல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை,” என்று வெள்ளை மாளிகையில் கூடியிருந்த ஆளுநர்களிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
“ஆனால் இந்த நிலை நீடிப்பதை அனுமதிக்கப்போவதில்லை. ஆக்கபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபடத் தயாராக இருப்பவர்கள் உள்ளனர். போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்,” என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார்.
உக்ரேனுக்குச் சொந்தமாக இருந்த நிலப் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாகவும் நிலைமை அதற்குச் சாதகமாக இருக்கிறது என்றும் அதிபர் டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.
எனவே, போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் புட்டின் முன்வைக்கும் நிபந்தனைகளை அதிபர் டிரம்ப் ஏற்கக்கூடும் என்று உக்ரேனும் அதன் நட்பு நாடுளும் அஞ்சுகின்றன.