உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர உறுதி

டிரம்ப்-ஸெலென்ஸ்கி இடையே ‘அற்புதமான’ தொலைபேசி உரையாடல்

உக்ரேனில் போரை முடிவுக்குக் கொண்டுவர உறுதி

2 mins read
c6a17b19-a141-41bc-9c86-d4a4a6340de1
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் புதன்கிழமை (மார்ச் 19) தொலைபேசியில் பேசுகிறார். - படம்: ஸெலென்ஸ்கி/எக்ஸ்

கியவ்: உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியும் புதன்கிழமை (மார்ச் 19) இணக்கம் கண்டனர்.

இருவருக்கும் இடையே ஒரு மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலை ‘அற்புதமானது’ என வெள்ளை மாளிகை வர்ணித்தது.

பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு கசப்பாக மாறியதைத் தொடர்ந்து, இந்தத் தொலைபேசி உரையாடல் ஆக்ககரமாக நடந்துள்ளது. அமெரிக்காவின் ஆதரவுக்காக திரு டிரம்ப்புக்கு திரு ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார். இருநாட்டுப் பேராளர்கள் வரும் நாள்களில் சவூதி அரேபியாவில் சந்திப்பதற்கு இருவரும் இணக்கம் தெரிவித்தனர்.

ரஷ்யத் தாக்குதல்களிலிருந்து உக்ரேனைப் பாதுகாக்க, கூடுதல் ஆகாயத் தற்காப்பு ஆதரவை திரு டிரம்ப்பிடம் திரு ஸெலென்ஸ்கி கோரினார். உக்ரேனுக்குத் தேவையான ராணுவ உபகரணங்களை ஐரோப்பாவில் கண்டறிவதற்கு திரு டிரம்ப் உறுதியளித்ததாக வெள்ளை மாளிகை கூறியது.

இதற்கிடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்க்கிழமை தாம் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்தும் திரு ஸெலென்ஸ்கியிடம் திரு டிரம்ப் விவரித்தார். திரு டிரம்ப் முன்மொழிந்த ஒரு மாதகால போர்நிறுத்தத்தை உக்ரேன் ஏற்றுக்கொண்டாலும், திரு புட்டின் அதை நிராகரித்தார். இருந்தாலும், உக்ரேனில் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள்மீது தாக்குதல்களை நிறுத்திவைக்க அவர் ஒப்புக்கொண்டார்.

ஆனால், இது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தென் ரஷ்யாவில் உள்ள ஓர் எண்ணெய்க் கிடங்கை உக்ரேன் தாக்கியதாக ரஷ்யா குறைகூறியது. மறுபுறம், உக்ரேனில் மருத்துவமனைகள், குடியிருப்புகள்மீது தாக்குதல் நடத்தியதோடு, சில ரயில் பாதைகளில் மின்சார விநியோகத்தை ரஷ்யா முடக்கியதாக உக்ரேன் சாடியது.

எது எப்படி இருந்தாலும், சிறைக்கைதிகள் பரிமாற்றத்தை தாங்கள் நடத்தியதாக இருதரப்பும் அறிவித்தன. ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஒருங்கிணைத்த ஓர் உடன்பாட்டில், ரஷ்யா-உக்ரேன் இருதரப்பும் தலா 175 படை வீரர்களை விடுவித்தன. மேலும், நல்லெண்ண அடிப்படையில், கூடுதலாக 22 காயமடைந்துள்ள உக்ரேனியர்களை தான் விடுவித்ததாக ரஷ்யா கூறியது.

குறிப்புச் சொற்கள்