வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இவ்வாரம் துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
செவ்வாய்க்கிழமை துருக்கி சென்று சேரும் அவர், மறுநாள் அமெரிக்காவின் தற்காப்பு நட்பு நாடுகளுடனான உச்சிமாநாட்டிற்கு முன்னர் துருக்கி அதிபர் ரெசப் தயிப் எர்டோகனைச் சந்திக்க இருப்பதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் அன்னா கெல்லி தெரிவித்துள்ளார்.
அதேபோல, நேட்டோ மாநாட்டின்போது உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கியைச் சந்திக்கவும் டிரம்ப் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி அப்போது ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் பேசக்கூடும் என்று அது பற்றி அறிந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக இருந்தபோது, ரஷ்ய-உக்ரேனிய விவகாரத்தை ஒரே நாளில் முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாகச் சூளுரைத்தார் டிரம்ப். ஆயினும், அது நிறைவேறாத விரக்கியில் அவர் தற்போது இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கிடையே, புதன்கிழமை (ஜூலை 8) நடைபெற இருக்கும் நேட்டோ மாநாட்டில், கிரீன்லாந்து விவகாரம், ஐரோப்பியப் பாதுகாப்புச் செலவினங்கள் மற்றும் ஈரான் போர் விவகாரம் தொடர்பில் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் தொடர்பாகப் பதற்றம் எழும் என்று கூறப்படுகிறது.
ஈரானுடனான போரில் அமெரிக்காவுக்குப் போதுமான ஆதரவு தராததற்காக ஐரோப்பியத் தலைவர்களை டிரம்ப் விமர்சித்திருந்தார்.
இருப்பினும், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான புதிய அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள ஐரோப்பியத் தலைவர்கள் அதற்கு அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் நாடுகின்றனர்.
ஈரான் போரில் அமெரிக்கா அதிக நாட்டம் செலுத்தி வருவதால் உக்ரேன்-ரஷ்யா இடையே சமரசம் செய்து வைப்பதற்கான டிரம்ப்பின் முயற்சிகள் முடங்கியுள்ளன.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கடந்த சனிக்கிழமை (ஜூலை 4) டிரம்ப் பேசியதாகவும் உக்ரேனிய விவகாரம் பற்றியும் நடைபெற இருக்கும் நேட்டோ மாநாடு பற்றியும் அப்போது அவ்விருவரும் உரையாடியதாகவும் கிரெம்ளின் மாளிகையின் வெளியுறவுக் கொள்கை நிர்வாகி யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

