கியவ்: தங்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருந்தாலும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆதரவு உக்ரேனுக்கு மிக முக்கியம் என்று வலியுறுத்தியுள்ளார் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.
ஸெலென்ஸ்கிக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட நேரிட்டது.
பொதுவாக அரசதந்திரச் சந்திப்புகளில் காணப்படாத அந்நிகழ்வுக்குப் பிறகு ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததன் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் கியவ்வின் பங்காளிகளான ஐரோப்பிய நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.
ஸெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் கெயர் ஸ்டார்மரைச் சந்திக்க சனிக்கிழமை (மார்ச் 1) பிரிட்டன் சென்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) உக்ரேனின் பாங்காளி நாடுகளாக இருக்கும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்தத் திட்டமிடப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) ஸெலென்ஸ்கிக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடந்த வாக்குவாதம் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. அதேவேளை, ஸெலென்ஸ்கியை டிரம்ப் சாடியதை ரஷ்யா சாதகமாகப் பார்த்தது.
இருந்தாலும், டிரம்ப்பின் ஆதரவு தங்களுக்கு முக்கியம் என்று ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
“டிரம்ப்பின் ஆதரவு எங்களுக்கு இருப்பது மிகவும் முக்கியம். போரை முடிவுக்குக் கொண்டு வருவது அவர் விருப்பம். அதேவேளை, அமைதி நிலவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது,” என்று ஸெலென்ஸ்கி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
பாதுகாப்பு சார்ந்த உத்தரவாதங்களைப் பெறுவதில் முதற்கட்டமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தாம் தயாராய் இருப்பதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
ஸெலென்ஸ்கி - டிரம்ப் வாக்குவாதத்திற்குப் பிறகு ஐரோப்பியத் தலைவர்கள் திரளாக ஸெலென்ஸ்கிக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் டிரம்ப், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை வரைவதன் தொடர்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தொடர்புகொண்டார்.
டிரம்ப்பின் அந்நடவடிக்கை, நேட்டோ கூட்டமைப்பு உறுப்பு நாடுகளுக்கிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.