ஹாங்காங்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் இடைவிடாத வரிவிதிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உற்பத்தியாளர்கள் வருங்கால வளர்ச்சி குறித்து குறைவான நம்பிக்கையையே வெளிப்படுத்தி உள்ளனர்.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு அவர்களிடம் நம்பிக்கையின்மை அதிகரித்து உள்ளது. ஜூலை மாதம் இந்த வட்டார உற்பத்தி மேம்பட்ட போதிலும் வருங்கால வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவுக்கு அவர்களிடம் நம்பிக்கை இல்லை. இது 2020 ஜூலைக்குப் பிறகு குறைந்துள்ளது.
அதனை ‘எஸ் அண்ட் பி’ உலகக் கொள்முதல் மேலாளர்களின் குறியீடு (PMI) உணர்த்துகிறது. ஆய்வின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட குறியீட்டு முடிவுகள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) வெளியிடப்பட்டன.
உற்பத்திப் பொருள்களுக்குப் பெரும்பாலும் தென்கிழக்கு ஆசியாவையே உலக நாடுகள் சார்ந்துள்ளன. அந்த வட்டாரம் முழுவதும் உள்ள உற்பத்தியாளர்கள், இவ்வாண்டின் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை வெளியிட்ட வர்த்தகக் கொள்கையால் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர்.
அதிபர் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வட்டார நாடுகள் சிலவற்றுக்கு ஆக அதிகமான வரிகளை அறிவித்தார். 10 முதல் 40 விழுக்காடு வரையிலான உயர்வு அவை.
அதனைத் தொடர்ந்து, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய தலைசிறந்த ஏற்றுமதி நாடுகளின் தொழிற்சாலை உற்பத்தி சுருங்கியது.
சீனாவின் உற்பத்திக் குறியீடு ஜூன் மாதம் 50.4ஆக இருந்தது. சென்ற மாதம் அது 49.5க்கு இறங்கியது. குறியீடு 50க்குக் கீழ் செல்வது சரிவைக் குறிக்கும்.
குறியீட்டை நிர்ணயிப்பதற்கான ஆய்வு ஜூலை 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதாவது, அமெரிக்காவுடன் தென்கொரியா வர்த்தக உடன்பாடு செய்துகொண்ட ஜூலை 30ஆம் தேதிக்கு முன்னர் ஆய்வு இடம்பெற்றது. உடன்பாடு காரணமாக தென்கொரியாவுக்கான வரி 25லிருந்து 15 விழுக்காடாகக் குறைக்கப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பீன்ஸ் மற்றும் வியட்னாமில் ஜூலை மாதம் உற்பத்தி விரிவடைந்தபோதிலும் தைவான், இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் அது இறக்கம் கண்டதாகக் குறியீட்டு அறிக்கை தெரிவித்தது.

