வாஷிங்டன்: அதிபர் டிரம்ப்பின் வரி விதிப்பைக் குறைகூறிய முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ், நாட்டில் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.
சிஎன்என் ஊடகத்துடனான நேர் காணலில் அவர் பல்வேறு தலைப்புகளை ஒட்டி பேசினார்.
2021 ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்கத் தலைநகரில் உள்ள கேப்பிட்டல் கட்டடத்தை முற்றுகையிட்டு கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் டிரம்ப் மன்னித்ததற்காகவும் பென்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திரு டிரம்ப் தனது இரண்டாவது தவணைக் காலத்தில் நட்பு நாடுகள் உட்பட பரந்த அளவில் வரிகளை விதித்துள்ளார். அமெரிக்காவுடன் பிற நாடுகள் நியாயமற்ற முறையில் நடந்துகொள்வதாகவும் ஒவ்வொரு நாட்டுடனும் வர்த்தக சமநிலையைக் காண வேண்டும் என்றும் டிரம்ப் அதற்கு காரணம் கூறியுள்ளார்.
திரு டிரம்ப் முதல் முறையாக அதிபரானபோது பென்ஸ் துணை அதிபராக இருந்தார்.
திரு டிரம்ப்பின் வரிக்கொள்கைகளால் நாட்டில் பணவீக்கம் ஏற்படும் என்றும் அது பயனீட்டாளர்களைப் பாதித்து இறுதியில் அமெரிக்காவின் பொருளியலுக்கு கேடு விளைவிக்கும் என்றும் பென்ஸ் குறிப்பிட்டார்.
முன்னாள் துணை அதிபரான பென்ஸ், டிரம்ப்பின் ரஷ்ய-உக்ரேன் போர் குறித்த கொள்கைகளையும் குறைகூறினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், அதிகாரத்தை மட்டுமே விரும்புவார் என்றார் அவர்.

