நடுவானில் காற்றுக் கொந்தளிப்பால் காயமுற்ற விமானச் சிப்பந்திக்கு முதுகெலும்பில் முறிவு

நடுவானில் காற்றுக் கொந்தளிப்பால் காயமுற்ற விமானச் சிப்பந்திக்கு முதுகெலும்பில் முறிவு

1 mins read
de2b6eb3-7256-44eb-87b1-cc6ad560272e
துருக்கியின் இஸ்தான்புலில் இருந்து இஸ்மிர் நகருக்கு மேற்கொள்ளப்பட்ட 50 நிமிட உள்நாட்டுப் பயணத்தின்போது காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உள்நாட்டு விமானப் பயணத்தின்போது காற்றுக் கொந்தளிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானச் சிப்பந்தி ஒருவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதாக துருக்கியின் ஆகப் பெரிய நாளிதழான ஹுரியெட் தெரிவித்தது.

துருக்கியின் ஆகப் பெரிய நகரான இஸ்தான்புலில் இருந்து இஸ்மிர் நகருக்கு மேற்கொள்ளப்பட்ட 50 நிமிட உள்நாட்டுப் பயணத்தின்போது அந்த விமானச் சிப்பந்தி பணியில் ஈடுபட்டிருந்தார்.

இருக்கைவார் அணியும்படி விமானி எச்சரிக்கை விடுத்த சற்று நேரத்தில், காற்றுக் கொந்தளிப்பால் அந்த விமானம் திடீரென கீழிறங்கியது.

இதனால் அந்த விமானச் சிப்பந்தி விமானத்தின் கூரையில் வீசப்பட்டு தரையில் விழுந்ததால் அவரது முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது.

அவர் வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும். இஸ்மிரில் விமானம் தரையிறங்கியவுடன் அந்தச் சிப்பந்தி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதை மருத்துவமனை ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது பற்றித் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்
விமானம்மருத்துவமனைகாயம்