யுகங்களுக்கான திருப்புமுனை: முதலாண்டு நிறைவுக் கூட்டத்தில் டிரம்ப் பெருமிதம்

யுகங்களுக்கான திருப்புமுனை: முதலாண்டு நிறைவுக் கூட்டத்தில் டிரம்ப் பெருமிதம்

2 mins read
a701e978-4363-4d27-bf37-d78eb0a7c872
அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். - படம்: இபிஏ

வாஷிங்டன்: அமெரிக்காவில் தமது நிர்வாகம் யுகங்களுக்கான திருப்புமுனையை ஏற்படுத்தி வருவதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

தமது இரண்டாம் தவணை ஆட்சிக் காலத்தின் முதலாண்டு நிறைவை ஒட்டி அதிபர் டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் (அமெரிக்க நேரப்படி) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) உரையாற்றினார்.

அப்போது தமது நிர்வாகத்தின்கீழ் நிகழ்த்தப்பட்ட முக்கியச் சாதனைகளை அவர் அடுக்கினார். அத்துடன், அடுத்த ஆண்டுக்கான தமது நிர்வாகத்தின் முன்னுரிமைத் திட்டங்களையும் திரு டிரம்ப் விவரித்தார்.

நவம்பர் மாதம் இடைத்தவணைத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்து வரும் சவால்களை அவர் கோடி காட்டினார்.

79 வயதாகும் திரு டிரம்ப் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததும் குடியரசுக் கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று, கைதட்டி பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதேநேரம், எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியுடன் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றத் தொடங்கிய திரு டிரம்ப், “என் சக அமெரிக்கர்களே, நமது நாடு இதுவரை கண்டிராத வலிமையையும் வசதியையும் பெற்றுள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஓராண்டுக்குப் பின்னர், இதுவரை யாரும் கண்டிராத மாற்றத்தை, யுகங்களுக்கான திருப்புமுனையை அமெரிக்காவில் நாம் ஏற்படுத்தி உள்ளோம் என்பதைக் கண்ணியத்துடனும் பெருமையுடனும் கூறிக்கொள்கிறேன்.

“அமெரிக்கப் பொருளியல் வரலாறு காணாத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக மாறி உள்ளன. எதிரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

“ராணுவமும் காவல்துறையும் இதற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் அதிக வலிமையுடன் திகழ்கின்றன. உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதை கிடைத்து வருகிறது.

“நான் இரண்டாம் தவணைக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டு, வெள்ளை மாளிகையில் நிர்வாகத்தைக் கையில் எடுத்தபோது அமெரிக்கா இக்கட்டான சூழலில் இருந்தது.

“பொருளியல் தேக்கநிலையும் பணவீக்கப் பிரச்சினைகளும் இருந்தன. அவற்றுக்குத் தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது,” என்று திரு டிரம்ப் குறிப்பிட்டார்.

வெனிசுவேலா அரசாங்கத்தை அமெரிக்கப் படைகள் கவிழ்த்து வெற்றி பெற்றது பற்றிக் கூறிய அவர், தற்போது அங்கிருந்து அமெரிக்காவுக்கு எண்ணெய் வளம் வந்துகொண்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இவ்வாண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் திரு டிரம்ப் மூன்று மணி நேரம் உரையாற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டது. 2025ல் ஒரு மணி நேரம் 40 நிமிடம் அவர் ஆற்றிய உரைதான் இதுவரை அவரது ஆக நீளமான பேச்சு என்று கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்