பெய்ஜிங்: பிறந்து பத்து நாள்களிலேயே வெவ்வேறு குடும்பங்களுக்குத் தத்து கொடுக்கப்பட்ட சகோதரிகள் இருவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிணைந்த நெகிழ்ச்சி சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
தாங்கள் சகோதரிகள் என்பதை அறியாமலேயே அவர்கள் நெருங்கிய தோழிகளாக இருந்தது இன்னும் வியப்பிற்குரிய செய்தி.
ஸாங் குவோஸின், ஹை சாவ் என்ற அவ்விருவரும் சீனாவின் ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வளர்ப்பதற்கு வசதி இல்லாததால் அவர்களின் பெற்றோர் அவர்களை தத்து கொடுக்க இணங்கினர். ஆயினும், தங்கள் பிள்ளைகள் இருவரும் ஒரே நகரில் இருக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை மட்டும் அவர்கள் விதித்தனர்.
இதையடுத்து, சகோதரிகள் இருவரும் தங்களது 17 வயதுவரை ஒருவரை ஒருவர் அறியாமலேயே வாழ்ந்து வந்தனர்.
அங்குள்ள கடை ஒன்றில் உதவியாளராக இருக்கும் ஒருவர் தன்னைப் போலவே இருப்பதாக வகுப்புத்தோழி கூறியதை அடுத்து, அவரை நேரில் பார்க்கச் சென்றார் ஹை.
முதன்முறை ஸாங்கின் முகத்தைப் பார்த்ததுமே அவருடன் நெருக்கமாக உணர்ந்ததாகக் கூறினார் ஹை.
இருவரும் ஒரே நாளில் பிறந்ததையும் அதன்பின் நூறு நாள்களில் இருவரும் சாவின் பிடியிலிருந்து தப்பியதையும் அவர்கள் அறிந்தனர்.
இருவரும் ஒத்த குரலையும் முடியலங்காரத்தையும் கொண்டிருந்தனர். இருவரது உணவு விருப்பமும் ஒன்றாகவே இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவற்றையெல்லாம் அறிந்தபின், இருவரும் நெருங்கிய தோழிகளாயினர்.
அவர்கள் இரட்டையர்கள் என்பதை அவர்களைத் தத்தெடுத்த குடும்பங்கள் அறிந்திருந்தும் உண்மையை மறைத்துவிட்டனர். மீண்டும் தங்கள் பெற்றோருடன் அவர்கள் சென்றுவிடுவார்களோ என்ற அச்சமே அதற்குக் காரணம்.
இருவரும் நெருங்கிய தோழிகளாகி 14 மாதங்களுக்குப் பிறகு, அவர்கள் இரட்டையர்கள் என்ற உண்மையை அவர்களின் இப்போதைய குடும்பங்கள் வெளிப்படுத்தின.
இருவரில் யார் மூத்தவர் என்பதை ஒரு விளையாட்டு மூலம் அவர்கள் முடிவுசெய்தாலும் உண்மையும் அதுவாகவே இருந்தது.
மேலும் பல தற்செயலான ஒத்த நிகழ்வுகள் அரங்கேறின. ஒருவருக்கொருவர் அறியாமலேயே சகோதரிகள் இருவரும் அடுத்தடுத்த குடியிருப்பு வளாகங்களில் வீடு வாங்கினர். இருவரது குழந்தைகளுக்குத் தற்போது 13 வயது. குழந்தைகள் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பயில்கின்றனர்.
இருவரது குழந்தைகளும் தோற்றத்தில் ஒன்றுபோலவே உள்ளனர்.
இப்போது 37 வயதாகும் சகோதரிகள் இருவரும் சேர்ந்து ஒரு சமூக ஊடகக் கணக்கை நடத்துகின்றனர். அதனை 62,000 பேர் பின்தொடர்கின்றனர்.
தாங்கள் ஒன்றிணைந்து 20 ஆண்டுகளானதை அண்மையில் அவர்கள் கொண்டாடினர்.
“கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உன்னைச் சந்தித்ததற்காக நன்றிக்கடன்பட்டுள்ளேன். நமது அடுத்த இருபது ஆண்டுகளை எதிர்நோக்கியுள்ளேன்,” என்று தங்களது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

