புதுடெல்லி: இந்தியாவில் பணியாற்றிவந்த தனது தூதரக அதிகாரிகள் இருவரை பங்ளாதேஷ் இடைக்கால அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லியிலுள்ள பங்ளாதேஷ் தூதரகத்தில் முதன்மை ஊடகச் செயலாளராக இருந்த ஷாபான் மஹ்மூத், கோல்கத்தா துணைத் தூதரகத்தில் அதே பொறுப்பில் இருந்த ரஞ்சன் சென் ஆகியோரே அவ்விருவர்.
அவர்களது பணிநீக்கம் ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து நடப்பிற்கு வருவதாக இந்தியா டுடே செய்தி குறிப்பிட்டது.
பங்ளாதேஷில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பை அடுத்து, பிரதமர் பொறுப்பிலிருந்து விலகி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் திருவாட்டி ஷேக் ஹசினா.
அதனைத் தொடர்ந்து, நோபெல் பரிசுபெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் பங்ளாதேஷில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி ஹசினாவிற்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளபோதும், எல்லா நாடுகளுடனும் இணக்கமான உறவுகள் தொடரும் என்று திரு யூனுஸ் தெரிவித்துள்ளார்.
பங்ளாதேஷில் பல வாரங்களாக நிகழ்ந்த அரசியல் பதற்றநிலையாலும் அதனால் வெடித்த வன்முறைகளாலும் 450க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருவாட்டி ஹசினா ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் நாடுவதாகத் தகவல் வெளியானது. ஆனால், அவருடைய மகன் அதனை மறுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, திருவாட்டி ஹசினாவின் அரசதந்திரக் கடப்பிதழை பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கம் இம்மாதத் தொடக்கத்தில் மீட்டுக்கொண்டது.