சான்டியாகோ: சிலியின் மத்திய தெற்குப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் இருவர் மாண்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை பார்வையிட்ட அதிபர் கேப்ரியல் போரிக், அதனைப் பேரிடராக அறிவித்தார்.
ஜூன் மாதப் பிற்பகுதியில், தலைநகர் சான்டியாகோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்தது. இதற்கு ‘எல் நினோ‘ எனும் பருவநிலை மாற்றத்தை ஒரு முக்கியக் காரணமாகக் குறிப்பிடுகின்றனர்.
சிலியின் மத்திய தெற்கு மலைப்பகுதிகளில் பெருமழை பொழிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சிலியில் கனமழையால் 26,000க்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளின்றித் தவிக்கின்றனர் எனவும் ஏறத்தாழ 34,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர் எனவும் சிலி பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் ஏறத்தாழ 38,000 பேர் மின்சாரமின்றித் தவிப்பதாகவும் அவ்வமைப்பு கூறியது.

