கோலாலம்பூர் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் இருவர் மரணம்

கோலாலம்பூர் விமான நிலையத்தில் வெளிநாட்டவர் இருவர் மரணம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

02 May 2026 - 5:13 pm

2 mins read

கோலாலம்பூர்: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் வெளிநாட்டவர் இருவர் மரணமடைந்தது குறித்து மலேசியக் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

மே 1ஆம் தேதி இரு வெவ்வேறு சம்பவங்களில் வெளிநாட்டவர் இருவர் உயிரிழந்தனர்.

முதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவத்தில் அல்ஜீரிய ஆடவர் ஒருவர் மரணமடைந்தார். இரு சம்பவங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவை.

சீனப் பெண் தொடர்புடைய சம்பவம் பிற்பகல் 2.20 மணியளவில் நிகழ்ந்தது என்று மே 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காவல்துறை தலைவர் எம்.ரவி தெரிவித்தார்.

மூன்றாவது மாடியில் பால்கனிக்கு வெளியே 27 வயது சீனப் பெண் உட்கார்ந்துகொண்டு அழுது கத்திக் கொண்டிருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சமாதானம் செய்ய முயன்றனர். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் அவரை நெருங்கி மீட்க முயற்சி செய்தார். ஆனால், அந்தப் பெண் சரக்குப் பகுதியில் குதித்துவிட்டார் என்று உதவி ஆணையருமான எம். ரவி கூறினார்.

அவருக்கு விமான நிலைய மருத்துவக் குழு முதலுதவிகளை வழங்கிய பிறகு புத்ராஜெயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலை 5.09 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

விசாரணையில் அவர் மே 2ஆம் தேதி சீனாவுக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இந்நிலையில், சம்பவம் குறித்து ஊகச் செய்திகளை நம்ப வேண்டாம் என்று திரு எம். ரவி கேட்டுக்கொண்டார்.

அதே மே 1ஆம் தேதி மாலை 9.10 மணிக்கு நிகழ்ந்த இரண்டாவது சம்பவத்தில் அல்ஜீரியாவைச் சேர்ந்த 30 வயது ஆடவர் வெளியே உள்ள பால்கனியிலிருந்து கீழே குதித்துவிட்டார். இது, உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த ஆடவர் தன்னுடைய முதுகுப் பையைத் திறந்தபிறகு தடுப்புகளை நோக்கி ஓடி ஏறிக் குதித்துவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியதாக ஆணையர் ரவி சொன்னார்.

இரு சம்பவங்களையும் மலேசிய காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
கோலாலம்பூர்மரணம்விசாரணைவிமான நிலையம்