ஹாங்காங்: ஹாங்காங்கில் வீடமைப்பு, அரசமைப்பு விவகாரங்கள் ஆகியவற்றைக் கவனிக்கும் அமைச்சர்கள் இருவர் பதவி விலகப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்மட்ட அரசியல் மாற்றங்களின் அங்கமாக இருவரும் பதவி விலகுவதாக சீன செய்தித்தாளான மிங் பாவ் தெரிவித்துள்ளது.
ஹாங்காங் வீடமைப்பு அமைச்சர் வினி ஹோ, அரசமைப்பு மற்றும் முக்கிய வட்டார விவகார அமைச்சர் எரிக் த்சாங் இருவரும் பதவி விலகப்போவதாக அடையாளம் தெரிவிக்கப்படாதோரை மேற்கோள்காட்டி மிங் பாவ் குறிப்பிட்டது. இருவரும் பதவி விலகவிருப்பதற்கான காரணங்களை மிங் பாவ் தெரிவிக்கவில்லை.
கடந்த நவம்பர் மாதம் ஹாங்காங் குடியிருப்பு வட்டாரம் ஒன்றில் மூண்ட தீயில் 168 பேர் கொல்லப்பட்டனர். பிறகு ஹாங்காங் ஆட்சிமன்றத் தேர்தலில் அதிகமானோர் வாக்களிக்கவில்லை.
அவற்றைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு ஹாங்காங் தலைமை நிர்வாகி அலுவலகத்திடமும் அரசாங்கப் பேச்சாளரிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இரு தரப்பும் கருத்து வெளியிடவில்லை.
ஹாங்காங் குடியிருப்பு வட்டாரத்தில் மூண்ட தீ பல நாள்களாகத் தொடர்ந்து எரிந்தது. அது, ஹாங்காங் பற்பல ஆண்டுகளில் சந்தித்த ஆக மோசமான தீச்சம்பவமாகும்.
அது, கட்டடப் பணித் துறையில் இருந்துவரும் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

