கோலாலம்பூர்: மோசமடைந்துவரும் புகைமூட்டமும் அதிகரித்துவரும் புறஊதா (UV) கதிர்வீச்சும் மலேசியர்கள் எதிர்நோக்கும் இரு பிரச்சினைகள் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்விரு பிரச்சினைகளும் அபாயகரமானவை. ஆனால், மனிதநலனைப் பொறுத்தவரை புகைமூட்டம்தான் பெரிய மிரட்டலாக இருக்கிறது என்று திரங்கானு மலேசியா பல்கலைக்கழக (யுஎம்டி) கடல்துறை அறிவியல், சுற்றுப்புறக் கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுங் ஜிங் சியாங் கூறியுள்ளார்.
“இவ்வட்டாரம் நிலநடுக்கோட்டுப் பகுதிக்கு மிக அருகில் இருப்பது புறஊதாக் கதிர்வீச்சு அளவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த வட்டாரத்துக்கு ஆண்டு முழுவதும் நேரடியாக சூரிய ஒளி கிடைப்பது அதற்குக் காரணம். ஆனால், புகைமூட்டம்தான் அதிக அபாயம் விளைவிக்கக்கூடியது. அது மூச்சுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக்கூடியது,” என்றார் டாக்டர் சுங்.
அதேபோல் தேசிய அன்டார்ட்டிக்கா ஆய்வு நிலையத்தின் பருவநிலை நிபுணர் அஸிஸான் அபு சாமா, “பூமியின் நடுப்பகுதியில் இருப்பதனால் ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில் இருப்பதைவிட பொதுவாக இங்கு புறஊதாக் கதிர்வீச்சு அளவு அதிகமாக இருக்கும்,” என்று விவரித்தார். அதேவேளை, காற்றை மாசுபடுத்தும் பிஎம்2.5 துகள்கள் இருப்பதனால் புகைமூட்டம்தான் கூடுதல் அபாயகரமானதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.