மயாமி: அமெரிக்காவின் மயாமி அனைத்துலக விமான நிலையத்தில் கோபா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் யுபிஎஸ் சரக்கு விமானமும் ஓடுபாதையில் செல்லும்போது ஒன்றோடொன்று மோதிக்கொண்டன.
கோபா ஜெட் விமானத்தின் இறக்கை முனை, யுபிஎஸ் போயிங் 767 விமானத்தின் முன்பகுதியில் உரசியதாக இச்சம்பவம் குறித்த ஒலிப்பதிவுகள் தெரிவித்தன. நவம்பர் 14 ஆம் தேதியன்று, உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு இச்சம்பவம் நடைபெற்றது.
பொகோட்டா செல்லவிருந்த யுபிஎஸ் விமானக் குழுவினரிடம், வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த கோபா போயிங் 737 விமானத்திற்கு வழிவிடுமாறு கட்டுப்பாட்டாளர்கள் கூறியிருந்ததாக விமானப் போக்குவரத்து நிர்வாகக் கூட்டமைப்பு தெரிவித்தது. இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
கோபா விமானம், பனாமா நகரிலிலிருந்து 166 பயணிகள், ஆறு ஊழியர்களுடன் வந்தது. அதில் பயணம் செய்த இருவருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. தங்கள் குழு பாதுகாப்பாக உள்ளதாக யுபிஎஸ் தெரிவித்தது. இரு நிறுவனமும் இதுகுறித்து விசாரணை நடத்தவுள்ளதாகத் தெரிவித்தது.
கடந்த செப்டம்பரில் இதே விமான நிலையத்தில் அமேசான் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்றதில் ஐவர் உயிரிழந்தனர்.
அனைத்துலக அளவிலான சரக்குப் போக்குவரத்துகளுக்கு நுழைவாயிலாகத் திகழும் மயாமி, அமெரிக்காவின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும். அங்கு இருபதாண்டுகளுக்கும் மேலாக இல்லாத அளவு விமானச் சேவை முடக்கத்தை எதிர்கொண்ட மறுநாள் இந்த விபத்தும் நிகழ்ந்துள்ளது. அதிகப்படியான தரவுச் சுமையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது.
